வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர், 35 பந்து களில் சதமடித்து உலக சாதனை படைத்தார்.
தென்ஆப்பிரிக்கா – வங்காள தேச அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி போட்செஃப்ஸ்ட்ரூம் சென்வாஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்காள தேச அணி கேப்டன் சாஹிப் அல் ஹசன் பீல்டிங் தேர்வு செய்தார். அதைத்தொடர்ந்து தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா, மொசேல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
ஆனால், தொடக்கத்தில் மொசேல் 5 ரன்னில் ஆட்டம் இழந்ததும், அடுத்து வந்த டுமினி 4 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 20 ரன்னிலும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக ரசிகர்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டது. அதுவரை 9.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது
அதையடுத்து, ஹசிம் அம்லா உடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். அதன்பின் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. டேவிட் மில்லரின் ஆக்ரோசமான ஆட்டத்தின் காரணமாக பந்து சிக்சருக்கும், பவுண்டருக்கும் பறந்தது.
தொடர்ந்து 11-வது ஓவரின்போது, மில்லர் கொடுத்த கேட்சை வங்காள தேச ஆட்டக்காரர்கள் தவற விட்டதன் காரணமாக, மில்லரின் ஆட்டம் மேலும் தொடர்ந்து. 15 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. மில்லர் 16 பந்நதில் 25 ரன்களும், அம்லா 46 பந்தில் 80 ரன்னும் எடுத்திருந்தனர்.
இந்நிலையில் 16-வது ஓவரை வங்கதேச பந்துவீச்சாளர் ருபெல் ஹொசைன் வீசினார். அவரின் பந்துவீச்சை மில்லர் அனாயசமாக எதிர்கொண்டார். இந்த ஒரு ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார்.
அதையடுத்து 17-வது ஓவரை மொகமது ஷாய்புதின் வீசினார். இந்த ஓவரில் அம்லா அவுட் ஆனார். அவர் 51 பந்தில் 85 ரன்கள் சேர்த்தார். மில்லர் ஒரு பவுண்டரி அடித்தார்.
18-வது ஓவரை தஸ்கின் அஹமது வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 23 பந்தில் அரைசதம் அடித்தார். 4-வது பந்தில் ஒரு சிக்ஸ்சர் விளாசினார். 18 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்திருந்தது. டேவிட் மில்லர் 25 பந்தில் 57 ரன்கள் எடுத்திருந்தார்.
19-வது ஓவரை மொகமது ஷாய்புதின் வீசினார். இந்த ஓவரில் டேவிட் மில்லர் தொடர்ச்சியாக ஐந்து சிக்சர்கள் விளாசினார். கடைசி பந்தையும் சிக்சருக்கு தூக்க முயற்சி செய்தார். ஆனால், அதில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது.
இந்த ஓவரின் 6 பந்தில் மட்டும் 31 ரன்கள்களை அடித்து தூள் கிளப்பினர் மில்லர். தொடர்ந்து 20-வது ஓவரை ருபெல் ஹொசைன் வீசினார்.
முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய மில்லர், அடுத்த இரண்டு பந்துகளிலும் தலா இரண்டு ரன்கள் எடுத்து சதத்தை பதிவு செய்தார். 35 பந்தில் 7 பவுண்டரி, 9 சிக்சருடன் சதம் அடித்து சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இவரது சதத்தால் தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது.
இதற்கு முன் தென்ஆப்பிரிக்காவின் லெவி 45 பந்திலும், டு பிளிசிஸ், இந்தியாவின் கே.எல். ராகுல் ஆகியோர் 46 பந்திலும், ஆரான் பிஞ்ச், கிறிஸ் கெய்ல் 47 பந்திலும் சதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.