டெல்லி: உலக புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர் டேவிட் அட்டன்பரோ இந்திராகாந்தி அமைதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு ஆண்டும், இந்திரா காந்தி அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த விருதுக்கு இயற்கை ஆர்வலர் டேவிட் அட்டன்பரோ தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையிலான தேர்வுக்குழு அவரை தேர்ந்தெடுத்துள்ளது. அட்டன்பரோ 50 ஆண்டுகளுக்கும் மேலாக விலங்குகள் பற்றிய வாழ்வியல் முறைகள், அவற்றின் செயல்பாடுகளை துல்லியமாக படம்பிடித்து ஆவணமாக்கி இருக்கிறார்.
100க்கும் மேற்பட்ட ஆவணப்படங்கள், ஏராளமான புத்தகங்களை எழுதி இருக்கிறார். பிபிசி தொலைக்காட்சிக்காக அவர் இயக்கிய ஆவணப்படங்கள் பலரால் பாராட்டப்பட்டவை. யுனெஸ்கோ விருது, எம்மி, பாப்டா என பல விருதுகளை அவர் பெற்றிருக்கிறார்.
விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவருக்கு பாராட்டு சான்றிதழுடன் ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மகாத்மா காந்தியின் வரலாற்றை காந்தி என்ற பெயரில் எடுத்து புகழ்பெற்ற ரிச்சர்ட் அட்டன்பரோவின் சகோதரர் டேவிட் அட்டன்பரோ என்பது குறிப்பிடத்தக்கது.