23 கோடிக்கும் அதிகமான டிக்-டாக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூ-டியூப் பயனர்களின் தரவுகள் திருட்டு

இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் யூடியூப்பில் இருந்து ஸ்கிராப்பிங் செய்யப்பட்ட கிட்டத்தட்ட 23.5 கோடிக்கும் அதிகமான சமூக ஊடகப் பயனர்களின் தரவுகளைக் கொண்ட தரவுத்தளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் பெயர்கள், படங்கள், தொடர்பு எண்கள் மற்றும் அவர்களைப் பின்தொடர்பவர்களைப் பற்றிய புள்ளிவிவரங்கள் அனைத்தும் இதில் இடம்பெற்றிருந்தது, இந்த தரவுதளம் எந்த கடவுச்சொல் பாதுகாப்பும் இல்லாமல் செயல்பட்டுக்கொண்டிருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இணையதள ஸ்கிராப்பிங் என்பது வலைப்பக்கங்களிலிருந்து தரவை தானியங்கு முறையில் சேகரிக்கும் (நகலெடுக்கும்) ஒரு நுட்பமாகும். இது சட்டவிரோதமானது அல்ல என்றாலும், பயனர் தரவைப் பாதுகாக்க சமூக ஊடக நிறுவனங்கள் இந்த நடைமுறையை தடைசெய்கின்றன.

இருப்பினும், பல புள்ளிவிவர பகுப்பாய்வு நிறுவனங்கள் பிரபலமான தளங்களில் வலை ஸ்கிராப்பர்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான பயனர் தகவல்களைக் கொண்ட தரவுத்தளங்களை உருவாக்குகின்றன.

இதுபோன்ற நிறுவனங்களில் சில, இந்தத் தரவுகளிலிருந்து பெரும்பாலான தகவல்களை பிற நிறுவனங்களுக்கு விற்கின்றன.

பாதுகாப்பு நிறுவனமான கம்பாரிடெக்கின் முன்னணி ஆராய்ச்சியாளரான பாப் டயச்சென்கோ, தற்போது செயல்பாட்டில் இல்லாத டீப் சோஷியல் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான தரவுத்தளத்தின் நகல்களை மூன்று வெவ்வேறு இடங்களில் கண்டதாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி கூறினார்.

இது குறித்து அந்த நிறுவனத்திடம் அவர்கள் விசாரித்த போது, ஹாங்காங்கை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சோஷியல் டேட்டா எனும் நிறுவனம் இதில் சம்பந்தப்பட்டிருப்பதும், தரவுகள் பகிரப்பட்டதை ஒப்புக்கொண்ட சோஷியல் டேட்டா நிறுவனம் இந்த தரவுதளத்தை உடனடியாக மூடிவிட்டனர். இருப்பினும் டீப் சோஷியல் நிறுவனத்திற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்தது.

இந்தத் தரவுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி முறையான வழியிலியேயே சேகரிக்கப்பட்டதாக அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக் போன்ற நிறுவனங்கள் இணைய ஸ்கிராப்பிங் நடைமுறைகளுக்கு தடைவிதித்திருக்கிறது. இது தொடர்பாக இந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டும் இதுகுறித்து இன்னும் அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லையென்று டயச்சென்கோ கூறினார்.

ஸ்கிராப் செய்யப்பட்ட தரவுகளில் மேற்கூறிய தளங்களில் இருந்து கோடிக்கணக்கான பயனர்களின் விவரங்களுடன் நான்கு முக்கிய தரவுத்தொகுப்புகள் இருந்தன. இதில் சுயவிவரப் பெயர், முழுப்பெயர், சுயவிவரப் புகைப்படம், வயது, பாலினம் மற்றும் பின்தொடர்பவர் புள்ளிவிவரங்கள் போன்ற தகவல்கள் இருந்தன.

இந்த வகையான தரவுகள் பெரும்பாலும் ஃபிஷிங் மற்றும் ஸ்பேம் எனப்படும் கவர்ச்சிகரமான விளம்பரப் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே, தங்கள் தரவுத்தளங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அந்தந்த நிறுவனங்களின் கடமையாகும்.

கடந்த ஆண்டு, 26.7 கோடி பேஸ்புக் பயனர்களின் ஸ்கிராப் செய்யப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு தரவுத்தளத்தை டயச்சென்கோ கண்டுபிடித்தார். அதே ஆண்டு அக்டோபரில், ஒரு அமெரிக்க நீதிமன்றம் ஒரு வலைத்தளத்தின் அனுமதியின்றி தரவை ஸ்கிராப்பிங் செய்வது சட்டவிரோதமானது அல்ல என்று கூறியது குறிப்பிடத்தக்கது.