ராமேஸ்வரம்,
தனுஷ்கோடியில் கடல் அலையில் வேன் சிக்கியதால், அதனுள் இருந்த சுற்றுலா பயணிகளை அந்த பகுதி மீனவர்கள் காப்பாற்றினர்.
தனுஷ்கோடி கடல் அலையில் வேன் சிக்கி, நகர முடியாமல் தத்தள்தித்து. இதனால் அதனுள் இருந்த சுற்றுலா பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். உயிர் பயத்தில் அலறினர். அவர்களை அந்த பகுதி மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.
1964ம் ஆண்டு டிசம்பர் 23ந்தேதி, தென் தமிழகத்தில் ஏற்பட்ட பயங்கர புயலால் தனுஷ்கோடி நகரமே முற்றிலுமாக அழிந்தது. கடல் கொந்தளிப்பால் தனுஷ்கோடி முழுவதுமே கடலில் மூழ்கிவிட்டது. அந்த பகுதியில் வசித்து வந்த சுமார் 1,500 பேர் பலியானார்கள்.
புயல் வீசுவதற்கு முன், ராமேசுவரத்தில் இருந்து, தனுஷ்கோடிக்கு வந்த ரெயிலும் இந்த சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமானது. கடல் பொங்கி, தனுஷ்கோடியை விழுங்கியபோது, ரெயிலும் கடலில் மூழ்கியது. ரெயிலில் 115 பேர் பயணம் செய்தனர். அவர்கள் அவ்வளவு பேரும் கடலில் மூழ்கி பலியாகி விட்டார்கள் என்று, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்த இடம் சுற்றுலா தலமாக மாறி உள்ளது. இந்த இடத்தையும், அங்குள்ள சிதைந்த கட்டிடங்களையும் காண தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இதற்காக சுற்றுலா பயணிகள் ராமேசுவரத்திலிருந்து முகுந்தராயர் சத்திரம் வரை, பேருந்து அல்லது தனியார் வாகனங்களில் வந்து பின்னர், அங்கிருந்து தனுஷ்கோடிக்கு கடற்கரை வழியே சுற்றுலா வேன் மூலம் செல்கின்றனர்.
தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதால் முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி, பாலம், கம்பிப்பாடு, அரிச்சல் முனை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 17 சுற்றுலாப் பயணிகள் வேன் மூலம் முகுந்தராயர் சத்திரத்திலிருந்து கடற்கரை வழியாக தனுஷ்கோடிக்கு சுற்றுலாவாக வந்தனர்.
அப்போது, கடலில் திடீரென ஏற்பட்ட அலையில் சிக்கி வேன் பள்ளத்தில் மாட்டிக் கொண்டது. இதனால் வேன் அந்த பகுதியை விட்டு நகர முடியாமல் தள்ளாடியது. வேனிற்குள்ளும் கடல்நீர் புக ஆரம்பித்தது.
இதனால் அச்சம் அடைந்த சுற்றுலாப் பயணிகள் வேனில் தவித்தபடி இருந்தனர். ஒருசிலர் உயிர் பயத்தில் அலற ஆரம்பித்தனர். சுமார் அரை மணி நேரம் அவர்கள் வேனுக்குள் தவித்தனர்.
அவர்களை மீட்க மற்றொரு வேனும் அந்த பகுதிக்கு வந்தது. அந்த வேனும் அலையில் சிக்கியது. இதனால் செய்வதறியாது திகைத்ததனர்.
இதைகண்ட முகுந்தராயர் சத்திரம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், உடனடியாக கடற்கரை வந்து வேனுக்குள் தவித்த சுற்றுலாப் பயணிகளை மீட்டு கரை சேர்த்த்னர். இதனால் சுற்றுலா பயணிகள் பெருமூச்சு விட்டனர்.
இதுகுறித்து அந்த பகுதிமக்கள் கூறும்போது,
புயலால் அழிந்து போன தனுஷ்கோடியை பார்க்க தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும், அரிச்சல் முனையில் தீர்த்தமாட நூற்றுக்கணக்கான பக்தர்களும் முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனைக்கு கடல் வழிப்பாதையை பயன்படுத்துகின்றனர்.
இங்கு சாலை வசதி இல்லை. கடற்கரை வழியாகத்தான் வர வேண்டும். இதனால், அலையின் வேகம் அதிகரிக்கும்போது, அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அலையில் சிக்கிவிடுகிறது. இதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.