அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், டென்மார்க்கின் இறையாண்மை பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதாக மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, டென்மார்க்கை தளமாகக் கொண்ட ஓய்வூதிய நிதியம் ஒன்று அமெரிக்க கருவூலப் பத்திரங்களில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது.

“அகாடமிகர் பென்ஷன்” என்ற அந்த ஓய்வூதிய நிதியம், இந்த மாத இறுதிக்குள் சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க கருவூலப் பத்திரங்களை விற்கப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த முடிவுக்கான காரணமாக, அமெரிக்க அரசின் நிதிநிலைமை தற்போது நிலைத்தன்மை இல்லாத பாதையில் செல்கிறது என்று அந்த நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பிப்ரவரி 1-ஆம் தேதிக்குள் அமெரிக்கா கிரீன்லாந்தைக் கைப்பற்றவில்லை என்றால், பல ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல்கள் சமீப நாட்களில் உலக நிதிச் சந்தைகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

சிஎன்பிசி செய்தியின்படி, நீண்ட காலமாக “பாதுகாப்பான முதலீடு” எனக் கருதப்பட்ட அமெரிக்க சொத்துகளை முதலீட்டாளர்கள் விற்பதால், கருவூலப் பத்திர விலைகள், பங்கு சந்தைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு ஆகியவை சரிவடைந்துள்ளன.

அகாடமிகர் பென்ஷன் விற்கும் 100 மில்லியன் டாலர் (ரூ. 915 கோடி) மதிப்புள்ள பங்குகள், மொத்த அமெரிக்க கருவூல சந்தையுடன் ஒப்பிட்டால் சொற்ப தொகைதான்.

ஆனாலும், இது அமெரிக்க அரசின் கடன் பாதுகாப்பு மீதான நம்பிக்கையை பாதிக்கும் சமிக்ஞை என சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதன் விளைவாக, உலக முதலீட்டாளர்கள் தற்போது “பாதுகாப்பான முதலீடு” என்ற அமெரிக்காவின் பாரம்பரிய இமேஜை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இன்றும் அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் உலகின் மிகப் பெரிய சந்தையாக இருந்தாலும், நம்பிக்கை குறித்த கேள்விகள் மெதுவாக எழுந்து வருவதை இந்த டென்மார்க் ஓய்வூதிய நிதியின் முடிவு வெளிப்படுத்துகிறது.

இதுபோன்ற முடிவுகள் அதிகரித்தால், எதிர்காலத்தில் அமெரிக்க கடன் பத்திரங்களுக்கு தேவையில் பெரிய மாற்றம் ஏற்படலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

தற்போது, ஐரோப்பிய நாடுகள் சுமார் 10 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க சொத்துகளை வைத்துள்ளன. இதில், 6 டிரில்லியன் டாலர் – அமெரிக்க பங்குகள்

4 டிரில்லியன் டாலர் – கருவூலப் பத்திரங்கள் மற்றும் பிற பத்திரங்கள்

இந்த அளவிலான சொத்துக்கள் விற்கப்பட்டால், அமெரிக்க நிதிச் சந்தைகளின் அடித்தளமே குலுங்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

டென்மார்க் தனிப்பட்ட முறையில் சிறிய பங்குதான் கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்தமாக ஐரோப்பா, அமெரிக்க கருவூலப் பத்திரங்களில் சுமார் 40% வெளிநாட்டு முதலீட்டைக் கொண்டுள்ளது.

ட்ரம்ப் மேலும் பதற்றத்தை அதிகரித்தால், இந்த முதலீட்டை ஒரு முக்கிய அரசியல்–நிதி ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

[youtube-feed feed=1]