ஸ்லாமாபாத்

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான டேனிஷ் கனேரியா தாம் இந்து என்பதால் மற்ற வீரர்கள் தம்மை கேவலப்படுத்தியதாக சோயப் அக்தர் கூறியது உண்மை எனத் தெரிவித்துள்ளார்.

டேனிஷ் கனேரியா

முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் அவர் 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தி முன்னணி வீரராகத் திகழ்ந்து வந்தார்.

இங்கிலாந்து உள்நாட்டு அணியான எஸ்ஸெக்ஸ் அணிக்கு விளையாடியபோது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவர் மீது புகார் சுமத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டதால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சோயப் அக்தர்

ஒரு கிரிக்கெட் நிகழ்வில் பேசிய மற்றொரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர், “எனது கிரிக்கெட் வாழ்க்கையில், கராச்சி, பஞ்சாப், பெஷாவர் பிரச்சனை குறித்து நான் எண்ணற்ற தடவை வாதிட வேண்டியிருந்தது.  அத்துடன் டேனிஷ் கனேரியா போன்ற இந்து கிரிக்கெட் வீரர்களிடம் ‘எங்களுடன் இங்கே ஏன் சாப்பிடுகிறாய்?’ என்று இதர வீரர்கள் கேட்டுள்ளனர்.

நான் அவர்களுக்கு எப்போதும், “உங்கள் வீட்டுக்குள் நுழைந்து உணவுகளை நான் எடுத்துக் கொண்டு, வெளியே போய் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்றும் உங்களை வெளியே தள்ளினால் நீங்கள் எப்படி உணருவீர்கள்?” என்று பதில் அளிப்பேன்.

டேனிஷ் கனேரியாவின் மத நம்பிக்கை காரணமாக , பலரும் அவர் அணியில் இருப்பதை விரும்பவில்லை.  என்றுமே அவரது திறமையான பணிக்குப் பாராட்டப்பட்டதில்லை. மற்ற வீரர்களால் தொடர்ந்து அவர் அவமானப்படுத்தப்பட்டார்” எனத் தெரிவித்தார்.

இது கிரிக்கெட் உலகில் கடும் சர்ச்சையை உண்டாக்கியது.   தற்போது டேனிஷ் கனேரியா தாம் இந்து என்பதால் மற்ற வீரர்கள் தன்னை அவர்களுடன் உணவு அருந்த அனுமதிக்கவில்லை என சோயப் அக்தர் கூறியது உண்மைதான் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ”நான் இந்து என்பதால் என்னுடன் பேசக்கூட மறுத்த பல பாகிஸ்தான் வீரர்களின் பெயரை நான் வெளியிட உள்ளேன்.  முன்பு இது குறித்து பேச எனக்குத் தைரியம் இல்லாமல் இருந்தது.   இப்போது சோயப் அக்தர் இது குறித்துத் தெரிவித்ததால் தைரியம் வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.