பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துதல், ரயில் மீது கல் வீசுதல், சிக்னல் சேதம், பயணிகளின் உடமைகள் திருட்டு போன்ற குற்றங்களுக்கு சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் முக்கிய காரணம் என ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) நடத்திய விரிவான ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ரயில்வே சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவது ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது குறித்து ஆர்.பி.எஃப்.க்கு வந்த புகார்களை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை கோட்டத்தின் புறநகர் ரயில் நிலையங்களில் இருந்து 10 முதல் 200 மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் 39 டாஸ்மாக் கடைகள் ஆர்பிஎஃப் அடையாளப்படுத்தியுள்ளது.
பெரம்பூர், கொருக்குப்பேட்டை, இந்துக் கல்லூரி, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், வேளச்சேரி, கஸ்தூரிபாய் நகர், தரமணி, பெருங்குடி, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, பழவந்தாங்கல், குரோம்பேட்டை, வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் அமைந்துள்ளன.
தவிர, அம்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள லெவல் கிராசிங் (எல்சி) கேட்களுக்கு அருகில் செயல்படும் சில மதுக்கடைகளை தெற்கு ரயில்வே கண்டறிந்துள்ளது.
இதனால் குடிபோதையில் ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் இறந்து கிடப்பது மற்றும் சிக்னலில் உள்ள செப்பு கம்பிகளை திருடுவது, சிக்னல்களை சேதப்படுத்துவது மற்றும் ரயில் மீது கல்வீசுவது என இந்தப் பகுதியில் மட்டும் மாதத்திற்கு 10 புகார்கள் வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
புறநகர் ரயில் நிலையங்களுக்குள், குறிப்பாக சென்னை கடற்கரை-வேளச்சேரி MRTS வழித்தடத்தில் உள்ள தரமணி, பெருங்குடி, வேளச்சேரி போன்ற நிலையங்களுக்குச் செல்லும் சாலைகள் பல நேரங்களில் வெறிச்சோடி காணப்படுகின்றன, அதே நேரத்தில் இந்த ரயில் நிலையங்களிலிருந்து டாஸ்மாக் கடைகள் 100 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் செயல்படுகின்றன.
இதனால் இந்த குறிப்பிட்ட TASMAC கடைகளை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி TASMAC நிர்வாகத்துக்கு ரயில்வே பாதுகாப்புப் படை கடிதம் அனுப்பியுள்ளது.
இதையடுத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகளை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது அதேபோல ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளுக்கு அருகில் செயல்படும் மதுபான கடைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.