பெங்களூரு: கர்நாடகா மாநிலம் தும்குரு அடுத்த குப்பி என்னுமிடத்தில் மலர்கள் மற்றும் தேங்காய்களுடன் கோயிலுக்கு வந்திருந்த தலித் பக்தரை மூலகாட்டம்மா கோயிலின் பூசாரி வெளியேறுமாறு கூறி பூஜை செய்ய மறுத்துவிட்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டம் குப்பி தாலுகாவின் நிட்டூர் கிராமத்தில் சில நாள்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம்  தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள முல்கத்தம்மா கோயிலில் தீண்டாமையை கடைப்பிடிப்பதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில்,  நிட்டூரைச் சேர்ந்த அனில் ராஜ் என்ற தலித் இளைஞர், முல்கத்தம்மா கோயிலில் உள்ள சுவாமிக்கு பூஜை செய்ய  தேங்காய் பழம், பூக்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். ஆனால், அப்போது கோவிலுக்கு வந்த பூசாரி, அவரை கோயிலில் இருந்து வெளியேறும்படி எச்சரித்ததுடன், அவர் கொண்டுவந்த காணிக்கைகளை எடுக்கவும் மறுத்து வெளியேற்றினார்.

இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், சம்பவம் குறித்து காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகநலத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.