பெங்களூரு: முன்னாள் அமைச்சரும் தற்போதைய சித்ரதுர்கா தொகுதியின் நாடாளுமன்ற தலித் உறுப்பினருமான நாராயணசாமி, கொல்லா சமூகத்தினர் வாழும் ஊருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
துமகுரா மாவட்டத்தின் பவகடா தாலுகாவில் அமைந்துள்ள கொல்லரஹட்டி என்ற ஊருக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நான்கு மருத்துவர்கள் மற்றும் இதர 2 நபர்களை அழைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட ஊருக்கு மாலை நேரத்தில் சென்றுள்ளார் நாராயணசாமி. அந்நேரத்தில் அந்த ஊரின் கொல்லா சமூகத்தைச் சேர்ந்த சிலர், தங்களின் குல வழக்கப்படி, தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை ஊருக்குள் அனுமதிக்க முடியாது என்றுகூறி தடுத்து நிறுத்தினர். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக மனம் புண்பட்ட அந்த மக்களவை உறுப்பினர் கூறியதாவது, “நான் ஒரு தலித் என்பதால் கொல்லரஹட்டி கிராமத்தில் நுழைய முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டது எனக்கு வேதனை அளிக்கிறது. எந்த வாழ்க்கை வசதிகளும் இல்லாமல், பல்லாண்டுகளாக குடிசைகளில் வாழ்ந்துவரும் அந்த மக்களின் பிரச்சினைகளை கவனித்து, அவர்களுக்கான வசதிகளை செய்துதரவே அங்கு சென்றேன்” என்றார்.
அதேசமயம், அதே ஊரின் மற்றொரு குழுவினர் அவரை ஊருக்குள் நுழையலாம் என்று அழைப்பு விடுத்தனர். ஆனால், என்னால் உங்களுக்குள் பிரச்சினை வேண்டாமென கூறி அந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார் நாராயணசாமி.
“என்னால் காவல்துறை உதவியுடன் அந்த கிராமத்தில் நுழைந்து, அந்த மக்களின் மீது புகார் பதிவு செய்திருக்க முடியும். ஆனால், அந்த மக்களின் மனங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்து அவர்களுக்கு கல்விப் புகட்ட வேண்டுமென்பதே எனது நோக்கம்” என்றும் கூறினார்.