காந்திநகர்:
குஜராத் மாநிலம் பாவ்நகரை மாவட்டம் திம்பி கிராமத்தை சேர்ந்த பிரதீப் ரத்தோட் (வயது 26) என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தலித் சமுதாயத்தை சேர்ந்த ரத்தோடு அவரது பண்ணையில் இருந்து வீட்டிற்கு குதிரையில் உட்கார்ந்து சவாரி செய்தபோது உயர் சமுதாயத்தை சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதை கண்டித்து ரத்தோட் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை ரத்தோட் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்ய மறுப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து உம்ரலா போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் ரத்தோடுக்கு அவரது தந்தை ஒரு குதிரை வாங்கி கொடுத்துள்ளார். தலித் பிரிவை சேர்ந்தவரகள் திம்பி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் குதிரையில் சவாரி செய்யக் கூடாது என்று தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தான் இக்கொலை சம்பவம் நடந்துள்ளது.
திம்பியின் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு தர்பார்ஸ் அல்லது சத்ரியாஸ் தான் பெரும்பான்மையான சமுதாயம். இங்கு 40 தலித் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. .