முசாபர்நகர்:

பா.ஜ ஆட்சியில் தலித்களுக்கு எதிராக அராஜகம் தொடர்வதால் உ.பி.யில் சுமார் ஒரு லட்சம் பேர் புத்த மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளனர்.þ

உ.பி.யில் ஒரு லட்சம் தலித் மக்களை ஒரே சமயத்தில் புத்த மதத்திற்கு மதமாற்றம் செய்யும் நிகழ்வு வரும் 14ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகிறது. முசாபர்நகர் மாவட்டத்ல் சஹரான்பூர் அருகே உள்ள சாபிர்பூர் கிராமத்தை சேர்ந்த தலித் மக்கள் தங்களுக்கு எதிராக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அராஜக போக்கிற்கு முடிவு கட்டும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.

ஜெய் சிந்து சங் என்ற புத்த மத அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. புத்த மதத்தினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சமூக வளை தளம் உள்ளிட்ட பல வகைகளில் அந்த அமைப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. வரும் 14ம் தேதி நடத்தும் நிகழ்வில் ஒரு லட்சம் பேரை மதமாற்ற திட்டமிட்டு அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இது குறித்து அந்த அமைப்பின் மாவட்ட செயலாளர் சிங் போத் கூறுகையில், ‘‘அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டது’’ என்றார்.

டியோ பேண்ட் பிம் ஆர்மி தலைவர் தீபக்குமார் கூறுகையில், ‘‘இந்த நிகழ்வில் புத்த மதத்திற்கு மாற தலித்கள் மத்தியில் அதிக ஆர்வம் உள்ளது. இந்த நிகழ்வுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க மறு க்கிறது. ஏற்கனவே முசாபர்நகரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்த நிகழ்வு தொடர்பான துண்டு பிரசுரங்கள் மாவட்டம் முழுவதும் பரவலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் கவுரி சங்கர் பிரியதர்சி கூறுகையில், ‘‘தலித்கள் மதமாற்றம் தொடர்பான துண்டு பிரசுரங்களை நான் படித்து பார்த்தேன். ஆனால் இது தொடர்பாக யாரும் எங்களை அணுகவில்லை. சமயங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆர்.டி.ஓ. அல்லது போலீசாரை அணுகியிருப்பார்கள்.

எனினும் மத ரீதியிலான நிகழ்வுகளுக்கு தடை உத்தரவு அமலில் உள்ளது. அதனால் அதுபோன்ற நிகழ்வுகளுக்கு எந்த சூழ்நிலையிலும் அனுமதி வழங்கப்படமாட்டாது’’ என்றார்.

புரன் சிங் என்பவர் கூறுகையில், ‘‘ மத்தியிலும், மாநிலத்திலும் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் தலித்கள் மீதான மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இந்த நிலை தான் உள்ளது. சமீபகாலமாக தாக்குதலும், அராஜகமும் அதிகரித்துள்ளது.

போலீசார் தலித்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கின்றனர். அவர்கள் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 14ம் தேதி ராத்தெடி கிராமத்தில் ஒரு லட்சம் தலித்கள் கூடி புத்த மதத்தை தழுவ முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

அந்த துண்டு பிரசுரத்தில் தீபக்குமார் உள்ளிட்ட மூன்று பேர் செல்போன் நம்பர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து தீபக்குமார் கூறுகையில், ‘‘எனது செல்போன் குறிப்பிட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தது முதல் தொடர்ந்து அழைப்புகள் வந்த கொண்டே இருக்கிறது. எனது போன் ஓய்வின்றி ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.

பஞ்சாப் முதல் தமிழ்நாட்டில் இருந்தும் அழைப்புகள் வருகிறது. தென்னிந்தியாவை சேர்ந்த ஒரு தலித் குழுவினர் 100 பேருடன் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதாக தெரிவித்துள்ளனர்’’ என்றார்.

முசாபர்நகர் மாவட்டம் சையோனி ஆற்றங்கரையில் உள்ள சுக்ரத்தான் முகாமில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தான் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யும் நிகழ்வு நடந்துள்ளது. மேலும், அங்கு சகாரன்பூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை வழங்க வேண்டும் என்ற பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

அதன் அருகில் இரண்டு உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வை போலீசார் அப்புறப்ப டுத்துவதற்கு முன்பே நூற்றுக்கணக்கான துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.