சென்னையின் பல்வேறு பகுதிகளில் கட்டுமானப் பணியாளர்கள், தினக்கூலிகள், டெலிவரி ஊழியர்கள் என பலரும் ஒரு குழுவாக மரத்தடியில் நிற்பது என்பது அன்றாட காட்சி.
சூளைமேடு நமசிவாயபுரம் சந்திப்பு, அண்ணா நெடும்பாதை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., நெல்சன் மாணிக்கம் சாலை என நகரின் பல இடங்களில் இதுபோன்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலை நேரத்திற்கு இடையே இதுபோன்ற மரத்தடியில் காலம்காலமாக ஓய்வு எடுப்பதை பார்க்க முடியும்.

வெயில் மற்றும் மழை நாட்களில் பல இடங்களில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நிற்பதற்கு இடமின்றி கூலிக்கும் வழியின்றி தவிப்பது உண்டு.
இதனைக் கருத்தில் கொண்டு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலத்துறை மற்றும் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று சென்னையின் மையப் பகுதியில் குளிரூட்டப்பட்ட ஓய்வறைகளை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.
பரீட்சார்த்த முறையில் அண்ணா நகர் மற்றும் கே.கே. நகரில் இதுபோன்ற ஓய்வறைகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதில் 200 சதுர அடியில் சுமார் 25 பேர் ஒரே நேரத்தில் அமரவும், உணவு உண்ணவும், மொபைல் சார்ஜ் செய்து கொள்வது மற்றும் கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் அண்ணா நகரில் அமைக்கப்பட்டுள்ள ஏ.சி. ஓய்வறை நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இதையடுத்து கே.கே. நகரிலும் அதனைத் தொடர்ந்து மேலும் 10 இடங்களிலும் இதுபோன்ற ஓய்வறைகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
போலீஸ் பூத் மற்றும் முக்கிய சந்திப்புகளுக்கு அருகில் அமையவிருக்கும் இந்த ஓய்வறைகளில் சிசிடிவி கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் பொருத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை முக்கியமாக டெலிவரி ஊழியர்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]