லக்னோ:
தினமும் ரூ.17 உதவித் தொகை தருவதாக பாஜக அரசு அறிவித்திருப்பது, விவசாயிகளை ஏமாற்றும் செயல் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;
தினமும் ரூ.17 கொடுத்தால் விவசாயிகள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நினைப்பது, பாஜக அரசின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றை அவசர கதியில் வலுக்கட்டாயமாக செயல்படுத்தியது போல், மக்களவை தேர்தல் வருவதால் விவசாயிகள் உதவித் தொகையையும் அவசரமாக செயல்படுத்துகின்றனர்.
2 ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்திருப்போருக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் 3 தவணைகளாக போடப்படும் என்று இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்திருப்பதே ஏமாற்று வேலை தான்.
அரசு இயந்திரத்தை மத்திய பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவது வெட்கக்கேடானது.
மேலும் தேர்தலை கருத்தில் கொண்டு இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்துவது, பாஜகவின் தவறான மன நிலையையே பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.