வாஷிங்டன்

விரைவில் அமெரிக்காவில் தினசரி ஒரு லட்சம் பேர் பாதிக்கக்கூடும் என அமெரிக்க தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி எச்சரித்துள்ளார்.

உலகில் அதிக அளவில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதுவரை 27.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சுமர் 1.30 லட்சத்துக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.  இதுவரை 11.43 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 14.57 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில்  பல இடங்களில் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள போதிலும் சமூக விலகல் முகக் கவசம் உள்ளிட்டவைகள் வலியுறுத்தப்படுகின்றன.   இருப்பினும் மக்கள் அவற்றை பின்பற்றாமல் தங்கல் விருப்பம் போல தெருக்களில் வலம் வருகின்றனர்.   இதனால் நாளுக்கு நாள் தொற்று மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.   தற்போது நாள்தோறும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைகின்றனர்.

நேற்று வாஷிங்டன் நகரில் செனட் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் பேசிய கொரோனா தடுப்பு தலைமை மருத்துவர் அந்தோணி ஃபாஸி, “தற்போது அமெரிக்காவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளதா என என்னைக் கேட்டால் அது மனநிறைவாக இல்லை என்றே நான்சொல்வேன்.  தினசரி பாதிப்பு அதிகரிப்பதை நீங்களே பார்க்கலாம்.   கொரோனா பாதிப்பு வளைகோடு மேலே மேலே சென்றுக் கொண்டுள்ளது.

மக்களிடையே இதே பொறுப்பின்மை தொடர்ந்தால் விரைவில் அமெரிக்கா இன்னும் மோசமாக கொரோனாவால் பாதிப்பு அடையும் என நான் எச்சரிக்கிறேன்.   இதை தடுக்காவிட்டால் நாம் மிக மிக மோசமாக பாதிப்பு அடைவோம்.  தினசரி 40 ஆயிரம் புதிய நோயாளிகள் உருவாகி வருவது விரைவில் தின்சரி ஒரு லட்சம் ஆக உயர வாய்ப்புள்ளது.  இது எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்