சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்  என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  கிளாம்பாக்கம் சென்னையில் இருந்து அதிக தூரத்தில் உள்ளதால், பெரும்பாலான சென்னை மக்கள் அங்கு செல்வதை தவிர்த்து வரும் நிலையில், மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு முன் வந்துள்ளது.

கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த புறநகர் பேருந்து நிலையத்தால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து புறநகர் பேருந்து நிலையம் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், அந்த பேருந்து நிலையத்துக்கு சென்னையில் இருந்து செல்ல முறையான பேருந்து வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.  ஆனால், மாநில அரசு, கிளாம்பாக்கம் செல்ல தொடர் பேருந்துகளை இயக்குவதாக கூறி வந்தாலும், மாதவரம், தண்டையார் பேட்டை, மணலி, பெரம்பூர் பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது.

பயணிகள், கிளம்பாக்கம் செல்ல, கோயம்பேடு சென்று பின்னர் அங்கிருந்து கிளம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், குறைந்தது 2மணி நேரம் முதல் 3மணி நேரம் ஆகிறது. அதன்பிறகு கிளம்பாக்கம் சிட்டி பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் பேருந்து நிலையத்திற்கு சுமார் 300 மீட்டர் தூரம் லக்கேஜ்களுடன் நடந்து செல்ல வேண்டி நிலை உள்ளது. இதற்காக அரசு, இலவச பேட்டரி பேருந்துகளை இயக்கினாலும், அது பயணிகளுக்கு போதுமானதாக இல்லை. இதனால், பெரும்பாலான பயணிகள் ரயில்களையே நாடி வருகின்றனர். இதனால்  தெற்கு ரயில்வே அதிக அளவில் சிறப்பு ரயில்களை இயக்கி, மக்களை திருப்திபடுத்தி வருகிறது.  மேலும், கிளாம் பாக்கத்தில் விடுமுறை தினங்கள் மற்றும் விசேஷ தினங்களை தவிர மற்ற நாட்களில் பயணிகள் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் வணிகர்களும், கோயம்பேடு மார்க்கட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருபவர்களும், குறிப்பிட்ட அளிவலான  பேருந்துளை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு செல்லும்  பலர் கிளம்பாக்கம் செல்வதை தவர்த்து,  சென்ட்ரல் மற்றும் கடற்கரையில் இருந்து இயக்கப்படும்  மின்சார ரயிலையே அதிக அளவில் நாடி வருகின்றனர். இதையடுத்து, திருவண்ணாமலைக்கு கோயம்பேட்டில் இருந்த பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு   85 பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து  இயக்க முடிவு- செய்யப்பட்டு உள்ளது. அதனப்டி, வரும் 23ம் தேதி முதல் தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை  வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்பொழுது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மூலமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேற்படி, தடங்களில் குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலான வர்கள் கோயம்பேடு மார்க்கட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தடப்பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலைத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கையின் அடிப்படையில்,  23/05/2024 முதல் திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

1. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் செஞ்சி வழியாக 90 பேருந்துகள் இயக்கப்படும்.

2. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 44 பேருந்துகள் ஆற்காடு, ஆரணி வழியாகவும்

தற்போது தினசரி கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்படும் 11 பேருந்துகளுடன் 30 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். ஆக மொத்தம் 85 பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கப்படும்.

எனவே, பயணிகள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.