புதுச்சேரி:

புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 12 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக முதல்வர்  நாராயணசாமி அறிவித்து உள்ளார். ஏற்கனவே 9 சதவிகிதம் அகவிலைப் படை உள்ள நிலையில், மேலும் 3 சதவிகிதம் கூட்டி, 12 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து,  புதுச்சேரி முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜனவரி மாதம் முதல் 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டு அதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து புதுவை அரசு ஊழியர்களுக்கும் 1.1.2019 முதல் அகவிலைப்படியை 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி அதற்கான ஒப்புதலை முதல்- அமைச்சர் நாராயணசாமி அளித்துள்ளார்.

இதற்கான அரசாணை நிதித்துறையின் மூலம் வெளியிடப்பட்டு, உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, அரசு ஊழியர்களின் மார்ச் மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும். இதற்காக புதுவை அரசுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3.60 கோடி கூடுதலாக செலவாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.