சென்னை: இலங்கை அருகே அடுத்த 12 மணி நேரத்தில்  ‘டிட்வா’ புயல் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல், இலங்கையை ஒட்டிய பகுதிகளில் மேலும் வலுவடைந்து புயல் உருவாக வாய்ப்பு உள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதும், அதற்கு ஏமன் நாடு பரிந்துரைத்த ‘டிட்வா’ (Titva) என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. இந்த புயல் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

டிட்வா புயல் உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடா, இலங்கையை ஒட்டி உள்ள கடற்கரை வழியாக நகரும். புயல் உருவாகி தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. புயலால் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன்  பிரதீப் ஜான் வெளியிட்டிருக்கும் கணிப்பில்,  “இந்த புயல் சின்னத்தால் டெல்டா பகுதி முதல் சென்னை வரை 99 சதவீதம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  நவ. 29 மற்றும் 30 ஆம் தேதி நாகை முதல் சென்னை வரை கனமழை பொழியும். நகர்வதில் தாமதம் ஏற்பட்டால் டிச. 1 ஆம் தேதியும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழையின் நவம்பர் மாதத்தின் சராசரியை எட்ட சென்னைக்கு இந்த புயல் சின்னம் மிகவும் முக்கியம் வாய்ந்தது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல டெல்டா வெதர்மேன்  ஹேமச்சந்திரன் கூறும்போது, இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலுவடைந்து,   இது புயலாக உருவெடுக்கும் பட்சத்தில் ‘டிட்வா’ என பெயரிடப்படும் என்றும் டிட்வா புயலால் தமிழகத்திற்கு நவம்பர் 29,30ம் தேதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.