சென்னை: இலங்கை கடலோரப் பகுதியில் உருவாகி உள்ள டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கனமழை கொட்டி வரும் நிலையில், ராமேஷ்வரம் முதல் சென்னை வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பல பகுதிகளில் சூறைக்காற்றும் வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் புயல் காரணமாக இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘டித்வா’ புயலின் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றமும், பலத்த காற்றுடன் கூடிய கனமழை யும் தீவிரமடைந்துள்ளது. தற்போது டிட்வா புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. ஏற்கனவே மணிக்கு 10 கி.மீ. தொலைவில் நகர்ந்த நிலையில் தற்போது மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து தெற்கே 540 கி.மீ. தூரத்தில் டிட்வா புயல் நிலைகொண்டுள்ளது. இது தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
டிட்வா புயல் காரணமாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்றும் ராமநாதபுரம், திருச்சி, அரியலூரி, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர்.
அரக்கோணத்தில் இருந்து தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் புதுச்சேரிக்கு 2 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஒரு அணிக்கு 30 பேர் என 8 குழுக்களாக டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
. டிட்வா புயல் எதிரொலியாக 16 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படையின் 30 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுகப்பட்டு வரும் நிலையில், புயலின் நகரும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘டித்வா’ புயலின் தாக்கத்தினால் எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டு, அபாய நிலை குறித்து மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், ஏற்கெனவே கடலுக்குச் சென்றவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் புயல் ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் போன்ற கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் கடுமையாக உள்ளது. இந்த சீற்றம் சென்னை வரை தொடர்கிறது.
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, இந்தப் புயல் வரும் நவம்பர் 30ஆம் தேதி அதிகாலை வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவின் இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை நெருங்கும் போது, அதன் தாக்கம் மேலும் அதிகமாக இருக்கும் என்பதால், கடலோர மாவட்ட நிர்வாகங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.