சென்னை:  டிட்வா புயல்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதால்,   “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ முதலமைச்சர் ஸ்டலின்  பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையை சூறையாடிய டிட்வா புயல் தமிழ்நாடு நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இதனால்,  சூறைக்காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த  நிலையில், பொதுமக்கள்  அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலெர்ட் விடுத்துள்ளார்.

முன்னதாக புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து,  சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர செயல்பாட்ட மையத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டிட்வா புயல் காரணமாக அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்ட  ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,  , “வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில், தெற்கு பகுதிகள் மற்றும் டெல்டா பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். ரெட் அலெர்ட்டும் கொடுத்திருக்கிறார்கள். அதனால், ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களை காணொலிக் காட்சி வாயிலாக தொடர்பு கொண்டோம்“ என தெரிவித்தார். மேலும், “ஏற்கனவே, நேற்றைய தினம் இதுகுறித்து என்னுடைய தலைமையில், தலைமைச் செயலாளர் முன்னிலையில், உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கூட்டத்தை கூட்டி, உரிய அறிவுரை வழங்கியிருக்கிறோம்“ எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

அதோடு, எல்லா மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களை அனுப்பி வைத்திருப்பதாகவும், அனைவரும் அவரவர்களுக்கு உரிய மாவட்டங்களுக்கு சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஏற்கனவே எந்தெந்த இடங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறதோ, அந்தந்த இடங்களில் கவனமாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.

அத்துடன்,   எந்த இடத்திலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்து விபத்து ஏற்படாமல் கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாகவும், அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

இதையடுத்து பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  “#CycloneDitwah பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.

16 #SDRF படைகளும் 12 #NDRF படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

அனைத்துத் துறைகளும் முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்திட வேண்டும்!

பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையினைப் பின்பற்றி, அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.“

இவ்வாறு கூறியுள்ளார்.