சென்னை: டிட்வா புயல்  மற்றும் கனமழை எச்சரிக்யையைத் தொடர்ந்துமுதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை எழிலகத்தில் உள்ள  அவசர கால செயல்பாட்டு மையத்தில்  ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அதிகாரிகளுடன் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும்  ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அப்புறப்படுத்துவதற் கான ஏற்பாடுகளும் செய்திருக்கிறோம். மாவட்டத்தில் உள்ள பொறுப்பு அமைச்சர்களும் இதனை கண்காணித்து வருகின்றனர்” என்றார். 

டிட்வா புயல் காரணமாக,  கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில்  உள்ளது. இது தமிழ்நாட்டை நோக்கி மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இந்த புயலானது, நவ.30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் சென்னை உள்பட டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் சூறாவளியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அதாவது,  தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மேலும்,  புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்றும் ராமநாதபுரம், திருச்சி, அரியலூரி, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.

இந்த நிலையில்  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முற்பகல் சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்திற்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர், அங்கு அதிகாரிகளடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைக்க அவர் உத்தரவிட்டார்.

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  முதல்வர்,  “நவ. 29, 30 தேதிகளில் தெற்கு பகுதிகளிலும் டெல்டா பகுதிகளிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் காணொலி மூலம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறோம். இதுதொடர்பாக நேற்று என்னுடைய தலைமையில் தலைமைச் செயலாளர் தலைமையிலான கூட்டத்தை கூட்டி எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறோம். அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து அனுப்பி வைத்திருக்கிறோம்.

ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் உஷாராக இருந்து கவனிக்க வேண்டும் என்றும் மின் கம்பி அறுந்த பகுதிகளிலும் கண்காணிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம். சென்னையிலும் அதிக மழையும் என்று சொல்கின்றனர். அனைத்து இடங்களிலும் முகாம்கள், உணவுப் பொருள்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்திருக்கிறோம். மாவட்டத்தில் உள்ள பொறுப்பு அமைச்சர்களும் இதனை கண்காணித்து வருகின்றனர்” என்றார்.