சென்னை: அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் இன்று அதிகாலை சென்யார் புயல் உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டுக்கு அதிக பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதியில் நவ.24 முதல் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நன்கோவரிலிருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவிலும், கார் நிகோபாரில் இருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே 870 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டது. அதுவே இரவு 11 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது.
இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் இன்று காலை 5.30 மணியளவில் சென்யார் புயல் உருவானது. இது மேலும் வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இந்த புயலுக்கு, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பரிந்துரைப்படி, ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் எங்கு பயணிக்கிறது என்பதை ஆய்வு செய்தும், புயலின் தீவிரத்தை வைத்தும், அதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். தற்போதைய நிலவரப்படி இந்த புயல் படிப்படியாக வலுவிழக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இந்த புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவ.24ஆம் தேதி நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்று (நவ.25) காலை 5.30 மணியளவில் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் – இலங்கை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியான நிலையில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் எனவும், பிற்பகலில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனபதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.