புதுடெல்லி:
ஜாவத் புயல் பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜாவத் சூறாவளி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  குறித்து டெல்லியில்  உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், உள்துறை செயலாளர், தேசிய பேரிடர் மற்றும் இந்திய வானிலை மையத்தின்  மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி ஜாவத் புயலால் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்வதற்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உணவு, குடிநீர்,சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள்  அளிக்கவும், 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை மூலம் மீட்புப் பணிகளைக் கண்காணிக்கவும் பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார்.
மீட்பு படகுகள், மரம் வெட்டும் கருவிகள், தொலைத் தொடர்பு சாதனங்களுடன்   33  தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.