சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ள நிலையில், அது இன்று புயலாக உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இன்று (மே 27) மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவி வருகிறது. இந்த நிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) இன்று உருவாக வாய்ப்புள்ளது. இந்தப் புயல் சின்னம் நகரும் திசையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக இன்று முதல் மே 30ம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கேரள எல்லைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்றும் நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று மே 27ம் தேதி 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மே 29 மற்றும் 30ம் தேதிகளில் கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனால், இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.