சென்னை: வடமாவட்டங்களை புரட்டிப்போட்ட பெஞ்சல் புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கடந்த ஒரு வாரமாக சென்னை உள்பட பல மாவட்ட மக்களை பயமுறுத்தி வந்த ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பர் 29-ந்தேதி மதியம் புயலாக மாறியது. தொடர்ந்து, 30ந்தேதி மாலை 5.30 மணியளவில் புதுச்சேரி-மரக்காணம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கத்தொடங்கியது. மெதுவாக கரையை கடந்த இந்த புயல் நள்ளிரவு நேரத்தில், புதுச்சேரி பகுதியில் நிலைகொண்ட நிலையில், பின்னர் வடமாவட்டங்களை நோக்கி நகரத் தொடங்கியது. இதன் காரணமாக விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலுர் என பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. அதிக பட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தகரை பகுதியில் 50 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது.
இதைதொடர்ந்து, புயலன் வேகம் குறையத் தொடங்கியது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்தது. இன்று காலை 5.30 மணி நிலவரப்படி ஃபெஞ்சல் புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு மற்றும் அதனையொட்டியுள்ள கிழக்க மத்திய அரபிக் கடலில் வடக்கு கேரளா- கர்நாடகா கடற்கரை பகுதியில் நாளை வெளிப்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது