சென்னை: பெஞ்சல் புயல் எதிரொலியாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்குஃபெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் தற்போது சென்னைக்கு 140 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் இன்று மாலை மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் தண்ணீரில் மிதக்கிறது. அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சில சுரங்கபாதைகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளதால், அவைகள் மூடப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், கனமழையால் சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமான சேவையின் வருகை மற்றும் புறப்படும் விமானங்களும் தற்கலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் நிற்பதால், வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் இறங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, நண்பகல் 12 மணிமுதல் இரவு 7 மணிவரையில், சென்னை விமான நிலையத்தின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் (Chennai Airport Authority) அறிவித்து இருக்கிறது. விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் வெள்ளநீர் சூழ்ந்து இருப்பதாலும், தொடர் கனமழை, மோசமான சீதோஷ்ணநிலை காரணமாக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரவு 7 மணிக்கு மேல் நிலைமையை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று 22 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பெங்களூர், விசாகப்பட்டினம், கொழும்பு போன்ற நகரங்களில் இருந்து வந்த விமானங்கள், வானிலை காரணமாக மீண்டும் புறப்பட்ட இடங்களுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
அதுபோல, ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் புறநகர் ரயில் சேவை குறைக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதைகளில் தண்ணீர் தேங்கி வருவதால், ரயில் சேவை குறைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மறு அறிவிப்பு வரும் வரை குறைந்த எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.