சென்னை:
வங்கக்கடலில் உருவான ஃபானி புயல், தமிழகத்தை ஏமாற்றிவிட்டு, மிக அதி தீவிர புயலாக உருபெற்று மணிக்கு 22 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் ஒடிசாவை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஒடிசாவில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஃபானி, நேற்று மாலை அதிதீவிர புயலாக மாறிய நிலையில், தற்போது, வடமேற்கு திசையில் மணிக்கு 22 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது ஒடிசா மாநிலம் பூரியில் இருந்து தெற்கு, தென்மேற்கு திசையில் 730 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கே 510 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகவும் தெரிவித்துள்ள வானிலை மையம், நாளை மறுதினம் (3ம் தேதி) பிற்பகல் பூரி அருகே கரையை கடக்க கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஃபானி புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், ஒடிசா, ஆந்திரா, மேற்குவங்கம் மாநிலங்களில் கடற்கரை பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு முன்னேற்பாடு கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மீட்பு குழுவினர் மற்றும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஃபானி புயல் காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய லாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மேலும், குமரிக்கடல், மன்னார்வளைகுடா மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் சில சமயங்களில் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
ஃபானி புயல் காரணமாக தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடற்பகுதி கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால்,மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்து உள்ளார்.