லண்டன்:

சைக்கிள் ஓட்டினால் புற்றுநோய், இருதய நோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேற்கு நார்வே பல்கலைக்கழக அப்ளைடு சயின்ஸ் துறை பேராசிரியர் லார்ஸ் போ ஆண்டர்சன் பிரிட்டிஸ் மருத்துவ இதழில் ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டுள்ளார்.

அதில், “மனித ஆரோக்கியத்திற்கும் சைக்கிள் ஓட்டுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. புற்றுநோய் தாக்குவதற்கு 45 சதவீதமும், இருதய நோய் தாக்குவதற்கு 46 சதவீதமும் வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது. சைக்கிள் ஓட்டாத இதர நபர்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் இந்த வேறுபாடு தெரியவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த கட்டுரையில், “நடந்து செல்வதன் மூலம் இருதய நோய் தாக்குவதற்கான 27 சதவீத வாய்ப்புகள் குறைகிறது. இதன் மூலம் மரணத்தை 36 சதவீதம் வரை தவிர்க்க முடியும். ஆனால் நடப்பதன் மூலம் புற்றுநோய் தாக்குதல், மற்றும் ஒட்டுமொத்தமாக இளமை மரணத்தை தவிர்க்க முடியாது.

சராசரியாக 53 வயது நிரம்பிய 2 லட்சத்து 64 ஆயிரத்து 377 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நோய் பாதிப்பு மற்றும் தாக்குதல் என்பதற்கு இந்த ஆய்வு இறுதி முடிவாக இருக்கிறது. இது முழுக்க முழுக்க பரிசோதனை கண்காணிப்பு அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “மனித ஆரோக்கியம் தொடர்பாக அரசு கொள்கை ரீதியாக சைக்கிள் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.
சாலைகளில் கூடுதலாக சைக்கிள் பாதைகளை அமைக்க வேண்டும். சைக்கிள் வாங்குதல் மற்றும் வாடகைக்கு எடுத்தல் போன்ற திட்டங்களை ஏற்படுத்தி பொது பயணத்திற்கு சைக்கிள் ஓட்டுவதற்காக வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

இது போன்ற சைக்கிள் ஓட்டும் ஆர்வமுள்ளவர்களை ஊக்கவிக்க அரசியல் ரீதியான நடவடிக்கை தேவை. இதன் மூலம் மக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும், க்ரோனிக் நோய் தாக்குதலை குறைக்க முடியும். குறிப்பாக கார் ஓட்டுவதில் இதர ள பாக்குவரத்து அம்சங்களுக்கு மாறும் போது சுற்றுசூழல் பாதிப்பு, போக்குவரத்து நெரிசல், உடல் ஆரோக்கியம் போன்வற்றுக்கு ஆதாயமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.