றெக்கை கட்டி பறக்குதய்யா கொரோனா கால சைக்கிள் பிசினஸ்…
ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின் மே 4-ல் தன் சைக்கிள் ஷோரூமை திறந்த சுரேஷ் குமாருக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது. அது சைக்கிள் வாங்கவென்று வந்து புதிய வாடிக்கையாளர்கள் தான். “எல்லா எடத்திலும் ஜிம் மூடியிருக்கதால ரெகுலரா ஒர்க்அவுட் பண்ற எல்லாரும் இப்போ சைக்கிளிங் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க” என்கிறார் ஆச்சர்யமாக.
Hella-வில் ப்ரோக்ராம் ஹெட்டாக இருக்கும் சுப்ரமணியன் நாராயணன், “நான் என் காரை கடைசியா எடுத்தது மார்ச் 23 அன்னிக்கி. இதுவரை 8000 கிமீ சைக்கிள் ஓட்டியிருக்கேன். இதுல இன்னொரு பயன் என்னென்னா, சைக்கிள்ல கடைகளுக்கு போறதால தேவையில்லாத பொருட்களை வாங்குறதையும் தவிர்த்திடறேன். இப்போ என்னை பார்த்து என் பிரண்ட்ஸ் எல்லாரும் சைக்கிள் வாங்கிட்டாங்க” என்கிறார்.
ரெட்ஹில்ஸ், கும்மிடிப்பூண்டி போன்ற ஏரியாக்களில் வேறுவிதமான வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்து வருகிறது என்கிறார் ஒரு சைக்கிள் ஷோரூம் ஊழியர். “வெளி மாநில தொழிளார்கள் எல்லாரும் அவங்கவங்க சொந்த ஊர்களுக்கு போறதுக்கு இது தான் வசதின்னு சொல்லி ரூ. 5000/- வரை குடுத்து சைக்கிள் வாங்கிட்டு போறாங்க. இங்க தினமும் 40 – 50 சைக்கிள் வரை விக்கிது. இப்போ புது ஸ்டாக் இறக்க வேண்டியதா இருக்கு” என்கிறார்.
பள்ளி விடுமுறை என்பதால் அதிகமான பெற்றோர் குழந்தைகளுக்கு சைக்கிள் வாங்கி தர ஆரம்பித்துள்ளனராம். “வெளிய எங்கேயும் போக முடியாத இந்த சூழலில் பசங்க அபார்ட்மென்ட் மொட்டை மாடில, இங்க கார் பார்க்கிங் ஏரியால நம்ம கண் எதிரிலேயே சைக்கிள் ஓட்டிகிட்டு இருக்கது பாதுகாப்பானதாக ஃபீலாகுது” என்கின்றனர்.
சைக்கிள் வியாபாரம் அதிகமாகி வாகனங்களின் பயன்பாடு குறைவது சுற்றுச்சூழலுக்கும் நன்மையாக அமைவது கூடுதல் அனுகூலம் தான்.
– லெட்சுமி பிரியா