சீனாவுடன் தொடர்புடைய ரெட்எக்கோ எனும் ஹேக்கர் குழு மூலம் தமிழகத்தின் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் உள்ளிட்ட இந்தியாவின் பத்துக்கும் மேற்பட்ட மின்துறை நிறுவனங்களை தாக்கி செயலிழக்க வைக்க சீனா திட்டமிட்டிருக்கிறது.
இந்த தகவலை அமெரிக்காவை சேர்ந்த ரெகார்டெட் பியூச்சர் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. உலகின் பல நாடுகளில் இருந்து செயல்படும் ஹேக்கர்களின் நடவடிக்கையை கண்காணிப்பதை நோக்கமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், கடந்த அக்டோபர் மாதம் மும்பையில் ஏற்பட்ட மின்தடைக்கு இந்த ஹேக்கர்களே காரணம் என்று கூறியிருக்கிறது.
இந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்படவில்லை என்றபோதும் இந்திய சீன எல்லை பதற்றத்தின் போதே இந்தியாவை சீர்குலைக்க சீனா இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
டெல்லி, மேற்கு வங்கம், அசாம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடக மும்பை, ஆகிய இடங்களில் உள்ள மின் பகிர்மான மையங்களையும் தமிழகத்தின் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் ஆகிய இடங்களில் உள்ள கட்டமைப்புகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக இந்த அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளில் சீன தயாரிப்பு உதிரிபாகங்கள் மற்றும் உபகரணங்கள் பயன்பாட்டில் இருப்பது அவர்களின் இந்த திட்டத்திற்கு எளிதாக அமைந்துள்ளது என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலும் கடந்த மாதம் இதே போன்று மின்தடை ஏற்பட்டு மின்சாரம் இல்லாமல் கடும் குளிருக்கு 40 பேர் பலியானார்கள், இதன் காரணமாக அஜாக்கிரதையாக செயல்பட்ட அந்த நிறுவனத்தின் செயல் அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.