டில்லி
காங்கிரஸ் செயற்குழுவில் நடந்ததாக எந்த ஒரு வதந்தியையும் பரப்ப வேண்டாம் என செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாம் போட்டியிட்ட இரு தொகுதிகளில் அமேதி தொகுதியில் பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணியால் தோற்கடிக்கப்ப்பட்டார். அதை ஒட்டி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை கூட்டி விவாதித்தது.
இந்த செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மூத்த தலைவர்கள் மீது கடும் கண்டனம் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. அது மட்டுமின்றி ஒரு ஆங்கில ஊடகம் ராகுல் காந்தி செயற்குழுவின் உத்தரவையும் மீறி ராஜினாமா செய்ய உள்ளதாக செய்திகள் வெளியிட்டது.
இது குறித்து காங்கிரஸ் செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் கட்சி ரகசியமாக நடத்திய செயற்குழு கூட்டத்தில் நடந்தவை குறித்து மீடியா உள்ளிட்ட பலரும் செய்திகளை வெளியிட்டு வருகின்ரனர். இது உண்மையான செய்தியா என்பதை அறியாமலே இச்செய்திகள் வருகின்றன.
எனவே காங்கிரஸ் செயற்குழு தேவையற்ற ஊகங்கள், அபிப்பிராயங்கள், வதந்திகள் ஆகியவற்றை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறது. செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு தனி மனிதரை பற்றியோ அவருடைய நன்னடத்தை பற்றியோ விவாதிக்கவில்லை” என தெரிவித்துள்ளது.