சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. 7 மணி நேரம் நடைபெற்ற இக் கூட்டத்தில் கட்சியின் பல விஷயங்கள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியாங்கா காந்தி உள்பட 52 பேர் கலந்து கொண்டனர். டெல்லியில் சுமார் 7 மணி நேரம் நீடித்த கூட்டத்தில், தமக்கு பதில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சோனியா காந்தியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சி செயற்குழுவில் 4 மாநில முதலமைச்சர்கள் உட்பட 52 பேர் கலந்து கொண்டனர். கட்சியையும், அதன் தலைமையையும் பலவீனமாக்க இங்கே யாருக்கும் உரிமை கிடையாது.

கட்சி விவகாரங்களை ஊடகங்கள் வழியாக வெளியே கூறமுடியாது. கொரோனா வைரஸ் பரவல், புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தியே அடுத்த 6 மாதங்களுக்கு நீடிப்பார் என்று கூறினார்.

கூட்டத்துக்கு முன்னர், சோனியா காந்தியே தலைவராக நீடிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தி இருந்தார். கபில் சிபில் உள்ளிட்ட பல தலைவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். ராகுல் காந்தி உடனடியாக கட்சி தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்று மூத்த தலைவர் அகமது படேல் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.