நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன.
முறைகேடுகளை தடுக்க தமிழக காவல்துறையினர், வாகன சோதனைகள் செய்து வருவதாக கூறப்படும் நிலையில், அரசியல் கட்சியினரின் அடாவடிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக் கின்றன…. நள்ளிரவில் தெருக்கள்தோறும், பரிசு பொருட்களும், குக்கர்களும், தோசை தவாக்களும் மூட்டை மூட்டையாக வந்து குவிந்து வருகின்றன. பல இடங்களில் இரவு நேரங்களில் ஓட்டுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன… ஆனால், இதை தேர்தல் ஆணையமோ, அதிகாரி களோ கண்டு கொள்வதாக தெரியவில்லை….
நமது மாநில மக்களை பொறுத்தவரையில் இலவசமாக கொடுத்தால் .. எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்வார்கள்… என்ன செய்வது பழக்க தோஷம்… பணத்தையும், இலவசத்தையும் காட்டியே தமிழக மக்களை சோம்பேறிகளாகவும், அடிமைகளாகவும் மாற்றி விட்டனர் நமது அரசியல்வாதிகள்…….
ஆனால்… இப்போது இருப்பதோ இளைஞர் யுகம்.. நீங்கள் நினைத்தால் நாட்டின் தலையெழுத் தையே மாற்ற முடியும்… அனைத்து பகுதிகளிலும் படித்த இளைஞர்கள், இளைஞிகள் அதிகம் பேர் உள்ளனர். உங்கள் ஒவ்வொருவரிடமும் மொபைல் போன் உண்டு. அதை இந்த தேர்தல் நேரத்தி லாவது நல்ல காரியத்துக்கு உபயோகப்படுத்தி, முறைகேடற்ற முறையில் தேர்தல் நடைபெற உறுதிகொள்ளுங்கள்.
ஒவ்வொருவரும் தேர்தல் முறைகேட்டை வெளிக்கொணர முன்வாருங்கள்.. வாக்கை விலை பேசாதீர்கள்.. உங்கள் குடும்பத்தினருக்கும் அறிவுறுத்துங்கள்…. விஞ்ஞான வளர்ச்சியை ஆக்கப்பூர்வ செயல்களுக்கு உபயோகப்பப்படுத்துங்கள்… இனிமேலாவது ஊழலற்ற புதியதோர் இந்தியா உருவாகட்டும் …
தேர்தல் முறைகேடுகளை தடுப்பதற்காக அகில இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே சிவிஜில் என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதை உபயோகப்படுத்தி தேர்தல் முறைகேடுகளை தடுக்க ஒவ்வொருவரும் முன்வாருங்கள்….
‘சி விஜில்’ (C Vigil-Vigilant Citizen)
‘சி விஜில்’ செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் பொதுமக்களிடையே பிரபலமாகவில்லை. தற்போது நாடு முழுவதும் தேர்தல் அறிவிக் கப்பட்டுள்ள நிலையில், சிவிஜில் செயலியின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது உங்கள் பத்திரிகை.காம் (www.patrikai.com) இணையதள செய்தி பத்திரிகை.
வாக்களிக்கும் ஒவ்வொரு குடிமகனும் தங்களுடைய மொபைலில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, உபயோகப்படுத்தி, முறைகேடுகளில் ஈடுபடும் அரசியல் கட்சியினர், வாக்கை விலை பேசும் அரசியல் தலைவர்கள், தேர்தல் விதிமீறல்கள் , வாக்காளர்களுக்கு மதுபானம், பணம் வழங்குதல், வாக்காளர்களுக்கு விருந்து வைத்து அவர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்து வது, பொய்யான தகவல்களை பரப்புவது, அவதூறான விமர்சனம், பணம் கொடுத்து செய்திகள் பிரசுரிப்பது, அடியாட்களை வைத்து மிரட்டுதல், பரிசு பொருட்கள் வழங்குவது, இலவசம் தருவதாக டோக்கன் கொடுப்பது போன்ற எந்தவிதமான தேர்தல் விதி மீறல்களையும், இந்த சிவிஜில் செயலி மூலம், தேர்தல்ஆணையத்துக்கு எளிதில் புகார் அளிக்க முடியும்…
அனைத்து மக்களும் எளிதாக உபயோகப்படுத்தும் வகையில் மிகவும் எளிமையான முறையில் `சி விஜில்’ செயலியைத் தேர்தல் ஆணையம் வடிவமைத்து வெளியிட்டுள்ளது.
இந்த மொபைல் செயலியை பயன்படுத்தி, நாட்டில் நேர்மையான முறையில் வாக்குப்பதிவுகள் நடைபெறும் வகையில், முறைகேடுகளை அம்பலப்படுத்துங்கள்… உங்கள் கண்ணில் படும் தேர்தல் முறைகேடுகளை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள சிவிஜில் மொபைல் செயலி மூலம், தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பி வையுங்கள்… உங்களின் புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்… முறைகேடு உறுதி செய்யப்பட்டால், தேர்ந்தெடுக்கப்படுபவரின் பதவிக்கே ஆப்புதான்….
இன்றைய டிஜிட்டல் உலகில், மொபைல் போன் இல்லாதவர்களே கிடையாது… அத்துடன் மாநகரம், நகரம் போன்ற பகுதிகளில் இன்டெர்நெட் வசதி இல்லாத மொபைலும் கிடையாது. அந்த அளவுக்கு நமது நாட்டில் மொபைல் போனும், இணையதள சேவையும், நம்மில் ஒன்றாக கலந்துவிட்டது. இன்றைய யுகத்தில் படித்தவர், படிக்காதவர், பாமரர் என அனைத்து தரப்பினரும் மொபைல் மூலம் வலைதளங்களுக்குள் புகுந்து விளையாடுவது கைவந்த கலையாகி உள்ளது. இந்த நவீன சேவைகளை நல்ல முறையில் பயன்படுத்தினால், நாம் புதியதோர் உலகத்தையே படைக்கலாம்…
இதன் மூலம் முறைகேடுகள் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்று புதியதோர் உலகத்தை உருவாக்க, நாம் ஒவ்வொருவரும் உறுதி கொள்வோம்…
சிவிஜில் உபயோகப்படுத்துவது எப்படி?
உங்களுடைய ஸ்மார்ட் மொபைல் போனில் உள்ள கூகுள் ப்ளே ஸ்டோருக்குள் சென்று, ‘C Vigil’ என்று டைப் செய்து, சிவிஜில் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். பின்னர் அதை இன்ஸ்டால் (install) கொடுத்து லோடு செய்யுங்கள். ஒருசில நிமிடங்களில் சிவிஜில் செயலி உங்களுடைய மொபைலில் இணைந்து விடும்.
இன்ஸ்டாலேசன் முடிந்த பிறகு, நாம் உபயோகப்படுத்த விரும்பும் மொழியாக ஆங்கிலத்தை தேர்வு செய்து விட்டு, நமது செல்போன் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். உடனே நமது மொபைல் போனுக்கு ஒன் டைம் பாஸ்வேர்டு எனப்படும் ஓடிபி (OTP) வரும். அந்த எண்ணை பதிவு செய்தால், வேண்டும். அதன்பிறகு செல்போன் எண்ணைப் பதிவு செய்தால், ஒருமுறை பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு (OTP) வரும். அதனுடன், நம்முடைய பெயர், முகவரி, பின்கோடு போன்றவற்றை பூர்த்தி செய்துவிட்டால் போதும். சிவிஜில் செயலி செயல்படத் தொடங்கி விடும்…
நாம் சிவிஜில் செயலி இன்ஸ்டால் செய்யும்போது கொடுக்கப்படும் மொபைல் எண்ணே நமக்கு யூசர் ஐடியாக இருக்கும். அதே வேளையில், தங்களது மொபைல் எண்ணை பதிவு செய்ய தயங்குபவர்கள், அதை பதியாமலும் செயலியைப் பயன்படுத்தலாம். ஆனால் இடம் குறித்த ( location option allow) தகவலை தெரிவிக்க வேண்டும்.
சரி… சிவிஜில் லோடு பண்ணியாச்சி… புகார்களை எப்படி அனுப்புவது…
உங்கள் பகுதிகளில் நடைபெறும் தேர்தல் முறைகேடுகள், விதி மீறல்கள், இலவச பொருட்கள் வழங்குவது, டோக்கன்கள் கொடுப்பது போன்றவற்றை, புகைப்படமாவோ அல்லது சுமார் 2 நிமிங்கள் ஓடக்கூடிய வீடியோவாகவோ எடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு புகாராக அனுப்பி வைக்கலாம்…
முறைகேடுகள் நடைபெறும் இடங்களை காட்டுவதற்காக Auto location capture ஆப்ஷன் வசதியாக இருக்கும். அதை ஆன் செய்துவிட்டு தேர்தல் முறைகேடுகளை படமாகவோ, வீடியோவாகவோ எடுத்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வையுங்கள்…
நாம் அனுப்பி வைக்கும் புகாரை ஏற்க சில நிமிடங்கள் பிடிக்கலாம்.. அதுவரை சற்று பொறுத்திருப்பது அவசியம். நமது புகார் பதிய செய்யப்பட்டதற்கான அத்தாட்சி, நாம் புகார் பதிவு செய்யும் செல்போனுக்கு தகவல் வரும்… புகார் குறித்த அடையாள எண் (Unique ID) அனுப்பப்படும்.
இந்த எண்ணைக் கொண்டு, நமது புகார் என்ன நிலையில் இருக்கிறது என்பதை டிராக் (Track) செய்து அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம்.
அனுப்பக்கூடிய புகார்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு (அதிகாரிகளுக்கு) செல்லும். பின்னர், தேர்தல் பறக்கும்படை அல்லது தனிப்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு அரை மணி நேரத்துக்குள் விரைந்து சென்று, விசாரணை நடத்துவார்கள்.
புகாரின் உண்மைத்தன்மையை அறிந்து, மாவட்டத் தேர்தல் அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். அவர் இதுகுறித்து 50 நிமிடங்களுக்குள் விசாரணை நடத்தப்படும்.
பின்னர் தேர்தல் ஆணையத்தின் தேசிய குறைதீர்வுமையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புகார் அளித்த 100 நிமிடங்களுக்குள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் புகார் அளிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் சிவிஜில் செயலி மூலம் ஏராளமான புகார்கள் வந்திருப்பதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாம் ஒவ்வொருவரும் நமது மொபைலில் சிவிஜில் செயலியை இன்றே இன்ஸ்டால் செய்து தேர்தல் முறைகேடுகளை தடுத்து புதியதோர் இந்தியாவை உருவாக்குவோம்…