டிக்கெட்டில் “பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை” என்கிற முத்திரையை ஒட்டிக் கொடுக்கும் போது. ’பயங்கரமாக மிரட்டப் போகிறார்கள் போலிருக்கிறது’ என்கிற எதிர்ப்பார்ப்பு உருவானது. ஆனால், சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியாவின் ’ஓப்பனிங்’ சீன் தான் அந்த மிரட்டல் என்கிற போதுதான் இது ’வேற’ வகையான பதினெட்டு வயசு என புரிந்தது.
ஆனால், சற்றே பயமுறுத்தவும்தான் செய்கிறார்கள்.
என்னடா…. தமிழ் சினிமாவில் ரெண்டு மூனு மாதங்களாக பேய்ப்படமே இல்லையே… ஒருவேளை சீசன் முடிஞ்சிடுச்சோ என்று சந்தேகப்படுகின்ற நம் செவுளில் அறைந்து, அவ்ளோ சீக்கிரம் விட்ருவோமா என்று திகீலென வந்து அட்டென்டன்ஸ் போட்டிருக்கிறது ’அவள்’.
ஆனால், மற்றுமொரு பேய்ப்படமாக ஆகி விடக்கூடாது என்று நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்கள்.
பொழைக்க வழியில்லாதவர்களுக்கு பொட்டிக்கடை கைகொடுப்பதைப் போல, தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்ட்டி வெற்றி வேண்டுமென்பவர்களுக்கு பேய்தான் கை கொடுக்கிறது போலிருக்கிறது.
கிட்டத்தட்ட ’ஃபீல்ட் அவுட்’ என்கிற நிலையிலிருந்த ராகவா லாரன்ஸால் வந்த வினை. ’காஞ்சனா’ மூலம் ஒரு பேய் ஹிட்டைக் கொடுத்தாலும் கொடுத்தார், அந்த பேய்கள் விடாமல் தமிழ் சினிமா ரசிகர்களைப் பிடித்துக் கொண்டு ஆட்டு ஆட்டுவென ஆட்டுகிறது போங்கள். வெற்றி வேண்டுமெனில் ஒரு பேய்ப்படம் எடுக்க வேண்டும் என்பது கோடம்பாக்க சூத்திரமாகி விட்டது. அது சரி.. ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியே ’பாபா’ வின் சொந்த கதை சூனியத்திற்குப் பிறகு ’சந்திரமுகி’ பேய் மூலம் தானே மீண்டார்?
அப்படியிருக்கையில் சித்தார்த்தெல்லாம் எம்மாத்திரம்.? ’வெயில்” என்கிற நல்ல படத்தை எடுத்த வசந்த பாலனின் இயக்கத்தில் ’காவியத் தலைவன்’ என்று உருகி உருகி நடித்தாலும் ஓடவில்லை. கன்னடத்து ’ஹிட்’டான லூசியாவை ‘ எனக்குள் ஒருவன்’ என தமிழாக்கினாலும் யாரும் சீந்துவதில்லை ’ஜில் ஜங் ஜக்’ என்று என்று புதுசா போனால் அது ஒரு தினுசா ஆகிவிடுகிறது என்கிற கையறு நிலையிலிருப்பவருக்கு ’அவள்’ என்கிற பேய் ஓரளவுக்கு கை கொடுத்திருக்கிறது.
கண்டிப்பாக இது சித்தார்த்துக்கு ஒரு ஹிட் தான். அல்லது நல்ல பெயர்தான்.
சரி கதைக்கு வரலாம். கதை என்ன பெரிய கதை இருந்து விட போகிறது நம்மூர்ப் பேய்ப் படங்களில்?
பேய்ப் படம் எடுக்க வேண்டும் என்று முடிவாகி விட்டதா. சரி ஒரு வீடு இல்லையென்றால் ஒரு அரண்மனையைப் பிடிக்க வேண்டும். அது பழங்காலத்து வீடாகவோ அரண்மனையாகவோ இருத்தல் சாலச் சிறந்தது. வீடு என்றால் புதிதாக குடி போக வேண்டும். அரண்மனை என்றால் கொஞ்ச நாள் தங்கி ஓய்வெடுக்க போக வேண்டும். அதில் நுழையும் போதே ஏதோவொரு அமானுஷ்ய சக்தி இருப்பதைக் காட்ட வேண்டும். பிறகு ஓரிரண்டு நாட்கள் அல்லது ஓரிரண்டு சீன்கள் மகிழ்ச்சியாகவும் ரொமான்சாகவும் நகர வேண்டும். பிறகு அவ்வப்போது பேய் இருப்பது போல காட்ட வேண்டும். முதுகுக்குப் பின்னால் கேமிராவை வைத்துக் கொண்டு மெதுவா..…க, ந……ட…..க்…..க விடவேண்டும். ’சட்’டென பின்னால் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும். பேய் இருந்தது போல இருந்தது. ஆனால் இல்லை.!!!!!!????
பிறகு ஒரு காட்சியில் யாரோ ஒருவர் அலறி அடித்து ஓடி வர வேண்டும். காரணம் கேட்டால் பே..பே…பேய் என குழற வேண்டும் ஆனால், மற்றவர்கள் நம்பக் கூடாது. பிறகு மற்றவர்களும் பேயைக் கண்டு அலறியடிப்பார்கள். அப்புறமென்ன… அந்த பேயை விரட்டியடிக்க வேண்டும்.
……. இப்படியாக ஒரு சராசரி பேய்ப் படத்திற்குண்டான சர்வ லட்சணங்களும், ’அவளு’க்குமுண்டு. ஆனால், அவைகளையெல்லாம் கொஞ்சமேனும் மறக்கடித்து ரசிக்க வைத்த விதத்தில் கவனிக்க வைக்கிறார் அறிமுக இயக்குனர் மிலிந்த் ராவ்.
காஞ்சனா பேயைப் போல ஆல் கிளாஸ் காமெடி பேயாக இல்லாமல் ’ஏ’ ரசிகர்களுக்கான எலைட் பேயாகப் பார்த்து பிடித்து வந்திருப்பதிலும் ஒரு சாமர்த்தியம் தெரிகிறது. .
தமிழ் பேய், கேரளா பேய், தெலுங்கு பேய் ஏன் வெள்ளைக்கார பேய் கூட வந்து ஆடி விட்டுப் போய் விட்டதே என சீனாவிலிருந்து புது பேயை இறக்குமதி செய்திருக்கிறார்கள். அதுவும் ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
இமாச்சல பிரதேசத்தின் மலைப்பகுதி ஒன்றிலிருக்கும் மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை நிபுணராக வேலை செய்கிறார் சித்தார்த். அத்துடன் அவரது காதல் மனைவி ஆண்ட்ரியாவுடனும். பக்கத்திலிருக்கும் ஒரு பழங்காலத்து வீட்டிற்கு குடி வருகிறார்கள் அதுல் குல்கர்னியின் குடும்பம். இரண்டு குடும்பங்களும் ஒன்றாக நன்றாக பழகுகிறார்கள். அதுல் குல்கர்னியின் மகள் ஜெனிக்கு திடிரென ஏதோ சித்தப்பிரமை பிடித்து விடுகிறது. கிணற்றில் குதித்து விடுகிறாள். வழக்கம் போல ஹீரோ காப்பாற்றி தண்ணியிலிருந்து தூக்கி வருகிறார். வந்து வழக்கமாக என்னென்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் தவறாமல் செய்கிறார். கன்னத்தை தட்டுவது…நெஞ்சை அமுத்துவது… அஃப்கோர்ஸ் வாயை உறிஞ்சுவது இத்யாதி..இத்யாதி. பிறகு அந்த வீட்டில் ஜெனிக்கு என்னென்னவோ அமானுஷ்யங்கள் நடக்கின்றன. மற்றவர்களுக்கும்தான்.
ஜெனியைப் பரிசோதிக்க வரும் மனோதத்துவ மருத்துவர் சுரேஷும், ஒரு கிருத்துவ பாதிரியாரும் மட்டுமின்றி அதுல் குல்கர்னி மற்றும் சித்தார்த் ஆகியோரும் பேயிடம் பயங்கரமாக அடி வாங்குகின்றனர். அதுல் குல்கர்னியின் அப்பா அந்த பேயை ஓட்ட ஒரு யாத்ரீகனை அழைத்து வருகிறார். சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்பு….
யார் அந்த பேய்…அது எப்படி பேயானது..எதற்காக அந்த வீட்டில் பேயாக இருக்கிறது…என்கிற கேள்விகளுக்கு விடையளிக்கிறாள் ’அவள்’
வழக்கம் போல இதிலும் பெண் பேய்தான் என்றாலும் ’டிமாண்ட்டி காலனி’ போல…ஸாரி. க்ளைமேக்சை சொல்லக் கூடாது. விமர்சன அறம்.
’ரங் தே பஸந்தி’ மற்றும் ’ஸ்ட்ரைக்கர்’ உள்ளிட்ட சில படங்களின் மூலம் ஹிந்தியிலும், ’பொம்மரிலு’ மற்றும் ’ஓ மை ஃப்ரண்ட்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தெலுங்கிலும் ஓரளவுக்கு ஹிட்டடித்துள்ள சித்தார்த்துக்கு இந்த படமும் மும்மொழிகளிலும் வெளியாகிறது. அதற்கேற்றாற் போலவே எல்லா மொழிகளிலும் நம்பத் தகுந்தாற் போலவே கதைக் களத்தையும் பாத்திரங்களையும் அமைத்துக் கொண்டிருப்பது புத்திசாலித்தனம். படத்தின் இயக்குனரான மிலிந்த் ராவுடன் இணைந்து சித்தார்த்தும் கத்கதையை எழுதியுள்ளார். இருவருக்கும் பாராட்டுக்கள்.
அதே சமயம் ஒரு ’நீட்’டான ’ஹாரர்’ ( ’புனைமருட்சி’ யென தமிழ்ப்படுத்தியுள்ளார் கவிஞர் மகுடேஸ்வரன் ) படம் எடுப்பது என்று முடிவான பிறகு வழக்கமான பேய்ப்படங்களைப் போல பேய்கள் குறுக்காலும் மறுக்காலும் ஓடுவதைப் போன்ற க்ளிஷேக்களைத் தவிர்த்திருந்தால் இன்னும் ’ஃப்ரெஷ்’ஷான பேயைக் கண்டு பயந்திருக்கலாம். ரகம் ரகமாக பேய்ப் படங்களைப் பார்த்து பழகிப் போயிருக்கும் நமக்கு, இந்த இடத்தில் ஒரு கரிமூஞ்சி எட்டிப் பார்க்கும் பாரு.., இந்த இடத்தில் ஒரு கிராஃபிக்ஸ் பேய் வரும் பாரு… என்று நாம் யோசிப்பதை இயக்குனரால் பொய்யாக்க முடியவில்லை. என்ன ஒன்று…. பேயை ஓட்டும் மந்திரவாதியாக மயில்சாமியோ மனோ பாலவோ வரவில்லை. யாரோ பெயர் தெரியாத யாத்ரீகன். அந்த வகையில் ஒரு நிம்மதி.
சித்தார்த். நல்ல அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார். அளவுக்கதிகமாக லிப் லாக்கும் பண்ணுகிறார். (ப்பா… எத்தனை முறை?) கதாநாயகி மது அருந்துபவளா.. சிகரெட் பிடிப்பவளா.. செக்ஸியானவளா அப்படியெனில் ஆண்டிரியாவை புக் பண்ணுங்கள் என்கிற காஸ்டிங் விதியை இந்த படத்திலும் கடை பிடித்திருக்கிறார்கள். ’ஆன்ட்டி’ரியா, சித்தார்த்துக்கு அக்கா போலிருப்பதாக நாம் நினைப்பதை ஒரு டயலாக்கிலும் வைத்து சமாளித்திருக்கிறார்கள். பட் நல்லாருக்கு.
எல்லா மொழிகளுக்கும் பொருந்திப் போகும் அளவான துல்லியமான வசனங்கள். தன்னுடைய ரொமான்ஸ் மூடைக் கெடுத்து விட்ட ஆண்ட்ரியாவின் மீது கோபமாக இருக்கும் சித்தார்த் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அவருடைய இதழில் முத்தம் பதித்து விட்டு, ”சட்னி காரமா இருக்கான்னு பாத்தேன்” என்று சொல்வது காமக் கவிதை. ”ஒரு பெண் குழந்தையை இழந்தால்தான் ஒரு ஆண் குழந்தை கிடைக்குமென்றால் அப்படிப்பட்ட ஆணே வேண்டாம்” என்கிற வசனம் தான் மையக்கரு.
அதுல் குல்கர்னி நஸ்ருதின் ஷாவைப் போலிருக்கிறார். அலாரத்தைப் பார்த்து பயந்து நடுங்கும் போது சிரிக்கவும் வைக்கிறார். ஜெனியாக வரும் அறிமுக நடிகையின் உடம்பை நெளித்து ,முறுக்கி, திருகி, சித்ரவதை செய்திருக்கிறார்கள். பாவம். பேயின் மேனரிஸ… ஸாரி வுமனரிஸங்க:ளை முடிந்தவரை வித்தியாசமாகக் காட்ட அரும்பாடுபட்டிருக்கிறார்கள்.
மசாலா பேய்ப்படங்களைப் போல கேமிராவைப் போட்டு ஆட்டு ஆட்டுவென ஆட்டாமல் நேர்த்தியான ஒளிப்பதிவு. பெரும்பாலான காட்சிகள் இண்ட்டீரியராக இருந்தாலும் கூட தேவையான இடத்தில் ஓளியை அதிகமாக்கி , குறைத்து சில இடங்களில் இல்லாமல் செய்து அசத்துகிறார் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா. 1930 களில் நடக்கும் காட்சிகளை கருப்பு வெள்ளையில்தான் படம் பிடித்தாக வேண்டுமா? இதென்ன சிந்தனை என்று விளங்கவில்லை.
இசை க்ருஷ். ஒரு பேய்ப்படத்திற்கு ( அப்பாடி எத்தனை பேய்) என்ன இசை தேவையோ அதை கொடுத்திருக்கிறார்.
இயக்குனர் மிலிந்த் ராவ், ஒரு உண்மைச் சம்பவத்தை எடுத்துக் கொண்டு அதை தெளிவான திரைக்கதையாக்கியிருக்கிறார். சில இடங்களில் எழுகின்ற சந்தேகங்களை பின் பாதியில் அழகாக தெளிவாக்குகிறார். உதாரணமாக, கிணற்றில் பேயைப் பார்க்கும் சித்தார்த் அதை ஏன் யாரிடமும் சொல்லவில்லை என்பது போன்ற சந்தேகங்கள். மேலும், ’சில பல’ காட்சிகளை வைக்கத் துணிந்தவர் முகங்களைக் கோரமாக்கிக் காட்டுவது போன்ற க்ளிஷேக்களையும் துணிந்து தவிர்த்திருந்தால் ’யாவரும் நலம்’ போல அற்புதமான ’ஹாரர்’ படம் கிடைத்திருக்கும்.
அவள் – (சிங்கிளாகப் பார்க்கும்) பார்வையாளர்களைக் கவர்ந்திருப்பதால் இதன் சீக்வெல்கள் வர வாய்ப்பிருக்கிறது. கதையையும் அந்த ஐடியாவில்தான் முடித்திருக்கிறார். ஆனால், அதிலாவது வித்தியாசமாக பயம் காட்ட வேண்டுகிறோம். மற்றபடி…
பாராட்டுக்கள் மிலிந்த் ராவ் அண்ட் சித்தார்த்.
விமர்சனம்: அதீதன் திருவாசகம்