சென்னை:
தென்மேற்கு பருவமழை ,இந்த அண்டு குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ள தனியார் வானிலை ஆய்வு நிறுவனமான ஸ்கைமெட், கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் ஆனால், இந்த முறை 3 நாட்கள் தாமதமாக 4-ம் தேதி தொடங்குகிறது. அந்தமான் நிகோபர் தீவுகளில் வரும் 22-ம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஸ்கைமெட் வானிலை மையத்தின் மேலாண் இயக்குநர் ஜதின் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தியாவில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை குறித்து பல்வேறு வகையான ஆய்வுகள் நடத்தப்பட்டதில், இந்த ஆண்டு இயல்புக்கும் குறைவாக இருக்கும் என்பதே எங்கள் கணிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல அந்தமான், நிகோபர் தீவுகளில் வரும் 22-ம் தேதி அல்லது 2 நாட்கள் தாமதமாகவோ தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படும் என்றும், கேரளாவில் கடந்த ஆண்டு மே 30-ம் தேதி தொடங்கியது. ஆனால், இந்த ஆண்டு ஜூன் 4ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு தென் மாநிலங்களைக் காட்டிலும், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் மழை மிகவும் குறையும். இயல்புக்கும் மிக அதிகமாகவும், இயல்பைக் காட்டிலும் அதிகமாகவும் மழை பெய்ய எந்தவிதமான வாய்ப்பும் இல்லை.
தென்இந்தியா பகுதிகளைப் பொறுத்தவரை நீண்டகால சராசரியில் 95 சதவீதம் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது, தென் இந்தியாவில் உபரி அளவாக மழை பெய்ய 5 சதவீத வாய்ப்பும், இயல்புக்கு அதிகமாக மழை பெய்ய 10 சதவீத வாய்ப்பும், இயல்பான மழைக்கு 60 சதவீதமும், இயல்புக்கும் குறைவாக மழை பெய்ய 15 சதவீத வாய்ப்பும், பற்றாக்குறை மழைக்கு 10 சதவீதமும் வாய்ப்பு உண்டு.
அதாவது 716 மிமி மழை பெய்யலாம். குறிப்பாக கர்நாடகத்தின் வட உள்பகுதிகள், ராயலசீமா ஆகிய பகுதிகளில் மழைபெய்வது குறையும், கேரளா, கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் மழை ஓரளவுக்கு நன்றாக பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.