டெல்லி: நடப்பாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்பில் சேர கியூட் (CUET PG) பொது நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பதிவு தொடங்கி உள்ள நிலையில், ஜூலை இறுதி வாரத்தில் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும் மத்தியஅரசு நடத்தி வரும், 42 மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்புகளான எம்ஏ, எம்காம், எம்எஸ்சி உள்பட முதுகலை படிப்புகளில் சேர கியூட் (CUET) பொதுநுழைவுத் தேர்வு எழுந்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்ட உள்ளது. இந்த தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. கியூட் பொதுநுழைவுத் தேர்வுக்கு, ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பிக்கலாம் என்றும், பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டுக்கான பொதுநுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் மே 19ந்தேதி தொடங்கி உள்ளது. விண்ணப்பிப்பதறகான கடைசி நாள் ஜூன் 18 என அறிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள், https://cuet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இதுவரை மத்திய பல்கலைக்கழகங்கள் தனித்தனியே நுழைவுத் தேர்வுகளை நடத்திவந்த நிலையில், இனி ஒரே நுழைவுத் தேர்வு மட்டுமே நடத்தப்பட உள்ளது. CUET – UG தேர்வைப் போல் CUET – PG தேர்வும் கணினி அடிப்படையிலான தேர்வாக ஜூலை இறுதி வாரத்தில் நடைபெறும் என்றும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.