கடலூர் மாவட்ட மக்களுக்கு விமோஷனமே கிடையாது என்று இயக்குனர் தங்கர்பச்சான் ஆருடம் கூறியிருக்கிறார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக களமிறங்கியவர் தங்கர்பச்சான்.

தமிழ்நாட்டின் தலைநகராக கடலூரை மாற்றுவதையும் பன்ருட்டி பலாப்பழத்தை உலகறியச் செய்து பல அரியவகை நோய்களை குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படப்போவதாக தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்.

அவரது இந்த முயற்சிகளுக்கு ‘கை’ மேல் பலன் கிடைக்கும் என்று ஆருடம் வெளியானது.

காங்கிரஸ் கட்சி சார்பில் ‘கை’ சின்னத்தில் போட்டியிட்ட டாக்டர் விஷ்ணு பிரசாத் இங்கு வெற்றிபெற்றார்.

தேமுதிக சார்பில் போட்டியிட்ட சிவக்கொழுந்து இரண்டாவது இடம் பிடித்தார்.

விஷ்ணு பிரசாதை விட 2.49 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்று 3வது இடம்பிடித்த தங்கர்பச்சான் தனக்கு வாக்களித்த 2.05 லட்சம் பேருக்கு நன்றி தெரிவிக்க நேற்று கடலூர் வந்தார்.

அப்போது பேசிய அவர், கடலூர் மக்கள் எப்பொழுதும் ஒரே கட்சிக்கு வாக்களித்து வருவதால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த தொகுதி மக்களுக்கு போராட்ட குணம் வேண்டும் என்று ஆவேசமாக பேசிய தங்கர்பச்சான் கடலூரில் பிறந்தவன் என்று சொல்லிக்கொள்ள அவமானமாக உள்ளதாகப் பேசினார்.

அவரது இந்தப் பேச்சு எஸ்.எஸ். ராமசாமி படையாட்சி போன்ற தலைவர்களை தந்த கடலூர் மக்களையும் பாட்டாளி மக்கள் கட்சியினரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.