அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோயில், விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் காலத்தில் இத்தலம் “பழமலை” என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் “விருத்தாசலம்” என்ற சொல்லால் அழைக்கப்பட்டது. “விருத்தம்” என்றால் “பழமை.” “அசலம்” என்றால் “மலை.” காலத்தால் மிகவும் முற்பட்டது இந்த மலை. தேவாரத்திருப்பதிகங்களில் அதே பொருளில் திருமுதுகுன்றம் என்று போற்றப்படுகின்றது. சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலை வடிவில் தான் தோன்றினார் என்றும், இந்த மலை தோன்றிய பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் தோன்றியது என்றும், திருவண்ணாமலைக்கும் முந்திய மலை என்றும் புராணங்கள் கூறுகின்றன.

இத்தலம் முன்பொரு காலத்தில் குன்றாக இருந்ததாம். விபசித்து முனிவர் முத்தா நதியில் நீராடி, இரவு திருக்கோயிலில் தங்கியதால் அருள் கிடைக்கப்பெற்று, திருப்பணி செய்யும் பேறு பெற்றார். இத்திருக்கோயிலில் தலமரமாக உள்ள வன்னி மரத்தின் இலைகளை திருக்கோயிலின் திருப்பணியின்போது விபசித்து முனிவர் தொழிலாளருக்கு வழங்கினார். அந்த இலைகள் அவர்களின் உழைப்பிற்கு ஏற்றவாறு பொற்காசுகளாக மாறியது என்பது வாய்வழிக்கதை. இந்த வன்னிமரம் 1700 ஆண்டுகளுக்கு முன்பானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இக்கோயிலில் எல்லாமே ஐந்து தான்.

*ஐந்து மூர்த்தங்கள்: விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர்.

இறைவனின் ஐந்து திருநாமம்: விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர், விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி.

ஐந்து விநாயகர்: ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், முப்பிள்ளையார், தசபுஜ கணபதி, வல்லப கணபதி.

இறைவனை தரிசனம் கண்டவர்கள்: உரோமச முனிவர், விபசித்து முனிவர், குமார தேவர், நாத சர்மா, அனவர்த்தினி.

ஐந்து கோபுரம்: கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்.

ஐந்து பிரகாரம் (திருச்சுற்று): தேரோடும் திருச்சுற்று, கைலாய திருச்சுற்று, வன்னியடித் திருச்சுற்று, அறுபத்து மூவர் திருச்சுற்று, பஞ்சவர்ணத் திருச்சுற்று.

ஐந்து நந்தி: இந்த நந்திகளுக்கு இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடைநந்தி, தர்மநந்தி என்று பெயர்.

ஐந்து உள் மண்டபம்: அர்த்த மண்டபம், இடைகழி மண்டபம், தபன மண்டபம், மகா மண்டபம், இசை மண்டபம்.

ஐந்து வெளி மண்டபம்: இருபது கால் மண்டபம், தீபாராதனை மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், விபசித்து மண்டபம், சித்திர மண்டபம்.

ஐந்து வழிபாடு: திருவனந்தல், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்த ஜாமம்.

ஐந்து திருவிழா: வைகாசி வசந்த உற்சவம், ஆனி திருமஞ்சனம், ஆடிப்பூரம், திருக்கல்யாணம், மார்கழி திருவாதிரை, மாசிமகம் 10 நாள் பிரம்மோற்ஸவம்.

ஐந்து தேர்: விநாயகர் தேர், முருகன் தேர், பழமலை நாதர் தேர், பெரியநாயகி தேர், சண்டிகேஸ்வரர் தேர்.

தலத்தின் ஐந்து பெயர்: திருமுதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி.சந்தோஷத்திற்காக ஆடிய தலம் என்றும் கூறுவர்.

இங்குள்ள அர்த்த மண்டபத்தில் 4 வேதங்களே 4 தூண்களாக அமைந்துள்ளன.

இத்தல தீர்த்தமான மணிமுத்தாறு நதியில், இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால், அது கல்லாக மாறி நதியிலேயே தங்கிவிடுவதாக தல புராணம் சொல்கிறது.

பெரியநாயகியம்மை பதிகம், க்ஷத்திரக்கோவை வெண்பா, பழமலை நாதர் அந்தாதி, பெரியநாயகி விருத்தம், கலித்தொகை, பிக்ஷாடன நவமணி மாலை, குருதரிசனப்பதிகம், பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களும் இத்தலத்திற்குரியது.

கர்நாடக மன்னன் இத்தலம் வந்த போது பசியால் வாடினான். அப்போது பெரியநாயகி இளமை வடிவெடுத்து பாலூட்டி அவனுக்கு குமார தேவர் என்று பெயர் சூட்டினாள்.

திருவிழா:

பிரம்மோற்சவம் – மாசி மாதம் – 10நாட்கள். 9 வது நாள் தேர்.

ஆடிப்பூரம் – 10நாட்கள் திருவிழா – அம்பாள் விசேசம் – திருக்கல்யாணம் – கொடி ஏற்றி அம்பாள் வீதி உலா.

வசந்த உற்சவம் – வைகாசி மாதம் -10 நாட்கள் திருவிழா.

ஆனித்திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம், கந்தர் சஷ்டி, சூரசம்காரம் ஆகியவையும் சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் பெரியநாயகருக்கும்(உற்சவர்) சிறப்பு அபிசேகம் நடைபெறுகிறது. பௌர்ணமி அம்மாவாசை மற்றும் பிரதோச நாட்களிலும் விசேடம்.

பிரார்த்தனை:

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. இத்தலத்து துர்க்கையம்மனை வழிபடுவோர்க்கு கல்யாண வரம் கைகூடப் பெறுகிறது. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. ஞாயிறு அன்று இராகு கால வேளையில் வடைமாலை சாத்தி இத்தலத்து பைரவரை வணங்கினால் அடுத்தடுத்து வரும் இடர்கள் துன்பங்கள் தூளாய்ப் போய்விடும்.

இத்தலத்து பெருமானை வழிபட்டால் இம்மைப்பயன்களும், மறுமைப்பயன்களும் கிடைக்கும் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். முத்தாநதியில் நீராடினால் சித்தி பெறுவதுடன் முக்தியும் கிட்டும் என்று புராண நூல்கள் கூறுகின்றன.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவியப் பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய ஆடை சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம்.

வழிகாட்டி:

சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டையிலிருந்து தெற்கே 21 கி.மீ. தூரத்தில் விருத்தாசலம் உள்ளது