நரேந்திர மோடி அரசுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தையொட்டி, நாடு தழுவிய பாரத் பந்தையும் அறிவித்துள்ளன விவசாய அமைப்புகள்.

இந்த அடைப்பிற்கு, அகில இந்திய அளவில் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனையடுத்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் இந்த பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தெலுங்கானாவில் நடைபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை மிகவும் கொடூரமாக அடக்கிய சந்திரசேகர ராவ், தற்போது விவசாயிகளின் போராட்டத்திற்கு தரும் ஆதரவிற்கு வேறுசில காரணங்கள் இருந்தாலும்கூட, அதனோடு, தெலுங்கானா மாநில தேர்தல் முடிவுகளையும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

மாநில சட்டசபையை முன்னதாகவே கலைத்து, சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு, மொத்தம் 119 இடங்களில் 88 இடங்களை வென்றபோது, தன்னை இப்போதைக்கு யாரும் அசைக்க முடியாது என்ற எண்ணம் சந்திரசேகர ராவுக்கு வந்திருக்கலாம். ஆனால், அடுத்த ஓராண்டில் நிலைமை அவர் எதிர்பாராத வகையில் மாறியது.

அம்மாநிலத்திலுள்ள மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகளில், 9 தொகுதிகளை மட்டுமே டிஆர்எஸ் கட்சியால் வெல்ல முடிந்தது. உச்சகட்டமாக, சந்திரசேகர ராவின் மகள் கவிதாவே, நிசாமாபாத் தொகுதியில் பாரதீய ஜனதாவிடம் தோற்றுப்போனார்.

அம்மாநிலத்தில், மொத்தமாக 4 தொகுதிகளில் வெற்றிபெற்று, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது பாரதீய ஜனதா. அப்போதிலிருந்தே, அம்மாநிலத்தைக் குறிவைக்கத் தொடங்கியது பாரதீய ஜனதா.

சமீபத்தில், டுபாகா என்ற மிக முக்கிய மற்றும் சந்திரசேகர ராவின் மானப் பிரச்சினையாக இருந்த சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில், யாருமே எதிர்பாராத வண்ணம், ஆளும் டிஆர்எஸ் கட்சியை வீழ்த்திவிட்டது பாரதீய ஜனதா.

பின்னர், ஐதராபாத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலை பெரியளவில் குறிவைத்து களமிறங்கியது பாரதீய ஜனதா. பிற்போக்குத்தனத்தின் அரசியல் அடையாளமான யோகியைக்கூட ஒரு சாதாரண மாநகராட்சி தேர்தலுக்கு பிரச்சாரத்திற்கு அழைத்து வந்தது. தேர்தல் முடிவில், 4 இடங்களை முந்தைய தேர்தலில் பெற்றிருந்த பாரதீய ஜனதா, இப்போது பெற்ற இடங்களோ 49. கடந்த தேர்தலில் 99 இடங்களில் வென்ற டிஆர்எஸ் கட்சி, இந்தமுறை பெற்றது வெறும் 56 இடங்கள் மட்டுமே.

மாநகராட்சியைக் கைப்பற்ற வேண்டுமெனில், அக்கட்சிக்கு ஓவைசி கட்சியின் ஆதரவு கட்டாயம் வேண்டும்.

ஜெகன்மோகன் ரெட்டிக்காக, தெலுங்கானா என்ற தனிமாநிலத்தை உருவாக்கிய காங்கிரஸ் கட்சி தற்போது அந்த மாநிலத்தில் காணாமலேயே போய்விட்டது. தெலுங்கு தேசத்தின் நிலைமையும் பரிதாபம்தான்.

எனவே, வரும் சட்டசபைத் தேர்தலுக்கு டிஆர்எஸ் கட்சியுடன் நேரடியாக மோதப் போவது பாரதீய ஜனதாவாகத்தான் இருக்கப் போகிறது. இந்த அச்சம் சந்திரசேகர ராவை வாட்டியெடுக்கத் துவங்கியிருக்கலாம்.

எனவே, பாரதீய ஜனதாவின் மத்திய அரசுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கு, தார்மீக ஆதரவோ அல்லது எந்தவகை ஆதரவோ, அதை வழங்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் சந்திரசேகர ராவ்!