சென்னை:

ன்று நடைபெற்ற ஐபிஎல் 12வது சீசனின் முதல் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எளிதாக வீழ்த்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி அபார வெற்றி பெற்றது. ஹர்பஜனின் அதிரடி பந்து வீச்சு சிஎஸ்கே வெற்றிக்கு பெரிதும் உதவியது.

ஐபிஎல் 12வது சீசன் இன்று தொடங்கியது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதல் வெற்றியை ருசிக்கப்போவது எந்த அணி என்பதில் இரு அணிகளுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

போட்டியின்போது டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் டோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதன் காரணமாக ஆர்சிபி அணி மட்டையுடன் களமிறங்கியது.

ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலியும் பார்த்திவ் படேலும் களமிறங்கினர். தொடக்கம் முதலே சிஎஸ்கே பவுலர்கள் ஆர்சிபி அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். முதல் ஓவரை தீபக் சாஹர் அருமையாக வீசினார். இதையடுத்து இரண்டாவது ஓவரிலேயே சீனியர் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கை பந்துவீச வைத்தார் தோனி.  ஹர்பஜனின் சுழலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விக்கெட்டுகள் சுருண்டது. மீண்டும் தீபக் சாஹர் வீசிய 3வது ஓவரில் கோலியை ரன் எடுக்கவிடாமல் தடுக்க, அழுத்தம் அதிகரித்தது.

ரன் எடுக்காத அழுத்தத்தில் ஹர்பஜன் வீசிய 4வது ஓவரில் கோலி தூக்கி அடிக்க, ஜடேஜா அதை கேட்ச் பிடித்தார். கோலி வெறும் 6 ரன்களில் வெளியேற, அதன்பிறகு மொயின் அலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரையுமே தலா 9 ரன்களில் ஹர்பஜன் சிங் அவுட்டாக்கினார்.

கோலி, டிவில்லியர்ஸ் என்ற இருபெரும் ஜாம்பவான்கள் உட்பட மொத்தம் 3 விக்கெட்டுகளை மிரட்டினார் ஹர்பஜன் சிங்.

இதையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் இளம் அதிரடி வீரர் ஹெட்மயர் களத்திற்கு வந்தார். இவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ரன்னே எடுக்காமல் ரெய்னாவால் ரன் அவுட்டாக்கப்பட்டு பெவிலியன் திரும்பினார்.

ஹெட்மயரை போலவே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு வீரர் ஷிவம் துபே. மும்பையை சேர்ந்த இவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இவரை வெறும் 2 ரன்னில் இம்ரான் தாஹிர் தனது சுழலில் வீழ்த்தினார். கோலின் டி கிராண்ட் ஹோமை ஜடேஜா வீழ்த்தினார். நவ்தீப் சைனி, சாஹல் ஆகியோரை தாஹிர் வீழ்த்த, உமேஷ் யாதவை ஜடேஜா போல்டாக்கி அனுப்பினார். ஆர்சிபி அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமனையில் பார்த்திவ் படேல் மட்டும் நிலைத்து நின்றார். ஆனாலும் அவரால் எந்த பயனும் இல்லை. கடைசி விக்கெட்டாக பார்த்திவ் படேலை பிராவோ வீழ்த்தினார். 17.1 ஓவரில் வெறும் 70 ரன்னுக்கு ஆர்சிபி அணி ஆல் அவுட்டானது.

அந்த அணியில் அதிகபட்சமாக பார்த்திவ் படேல் 29 ரன்களை அடித்தார். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். சிஎஸ்கே அணி சார்பில் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் பிராவோ ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

சென்னை அணியின் பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால், பெங்களூரு அணியில் மடமடவென விக்கட்டுகள் வீழ்ந்தது. ஆட்ட இறுதியில் பெங்களூரு அணி 70 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்நிலையில், 71 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியுள்ளது.

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன் மற்றும் ராயுடு களமிறங்கினர். ஆடுகளம் ஸ்பின்னிற்கு வெகுவாக சாதகமாக இருந்ததால் முதல் ஓவரையே சாஹலை வீசவைத்தார் கேப்டன் கோலி. முதல் ஓவரையே சாஹல் மெய்டன் செய்தார். அதன்பிறகு நவ்தீப் சைனியும் நன்றாக வீசினார். சாஹல் வீசிய 3வது ஓவரில் வாட்சனை கிளீன் போல்டாக்கி 0 ரன்னில் வெளியேற்றினார். 10 பந்துகள் பிடித்து ரன்னே எடுக்காமல் வெளியேறினார். அதன்பின்னர் ரெய்னாவும் ராயுடுவும் இணைந்து நிதானமாக ஆடினர்.

ரெய்னா 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவ் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். எனினும் இலக்கை நெருங்கிய நிலையில் 28 ரன்களில் சிராஜின் பந்தில் போல்டானார் ராயுடு. அதன்பிறகு கேதர் ஜாதவும் ஜடேஜாவும் இணைந்து இலக்கை எட்டினர். இதையடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.