டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக ரூ. 1 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
புதுடெல்லியில் இன்று நடந்த விழாவில், 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றதை கௌரவிக்கும் விதமாக நீரஜ் சோப்ராவுக்கு 8758 என்ற எண் பொறிக்கப்பட்ட ஜெர்சி ஒன்றும் பரிசளிக்கப்பட்டது.
தனிநபர் பிரிவில் அபினவ் பிந்த்ரா-வுக்கு (2008) அடுத்து ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது வீரர் நீரஜ் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சி.எஸ்.கே. அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் “நீரஜின் அபார சாதனைக்காக ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கிறது. தடகள போட்டிகளில் பதக்கம் (தங்கம்) வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றதன் மூலம், அடுத்த தலைமுறைக்கு ஒரு உத்வேகமாகத் திகழ்கிறார்.
87.58 என்பது இந்திய விளையாட்டு வரலாற்றில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு எண், இந்த சிறப்பு ஜெர்சியை நீரஜுக்கு வழங்குவது எங்களுக்கு ஒரு மரியாதை. அவர் தேசத்திற்கு மேலும் பெருமை சேர்க்க விரும்புகிறோம்” என்று கூறினார்.