டொரோண்டோ:

‘கிரிப்டோ கரன்சி’ நிறுவனர் திடீரென மரணம் அடைந்ததால் கிரிப்போ கரன்சி முறையில் அனுப்பிய 190 மில்லியன் டாலர் பணம் பறிபோனது. இது வாடிக்கையாளர்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் தற்போது பிரபலமடைந்து வரும் பிட் காயின் முறையிலான பணபரிவர்த்தனை போன்று ‘கிரிப்டோ கரன்சி’ என்ற புதிய பணபரிவர்த்தனை முறை கையாளப்பட்டு வருகிறது.

கனடா நாட்டில் இருந்து இயக்கப்படும் இம்முறையிலான பணபரிவர்த்தனையை நடத்தி வந்த குவாட்ரிகா சிஎக்ஸ் என்ற நிறுவனத்தில் உலகம் முழுவதும் 3 லட்சத்து 63 ஆயிரம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து நடத்தி வந்தவர் ஜெரால்டு காட்டன் (வயது30).

தனியாக அலுவலகம் எதுவும் இல்லாமல் தனியாக ஒரு மடிக்கணிணி மூலமே பணபரிவர்த்தனைகளை ஜெரால்டு காட்டன் நடத்தி வந்துள்ளார். அவரது மடிக்கணிணிககான கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) அவர் மட்டுமே அறிந்தவர். வேறு யாருக்கும் தெரியாத அந்த கடவுச்சொல் (பாஸ் வேர்டு) இல்லாமல் எந்த பணபரிவர்த்தனையும் செய்ய முடியாது. ஜெரால்டு காட்டன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது பெருங்குடல் பகுதியில் ஏற்பட்ட ஒருவித நோயால் கடந்த 2018 டிசம்பர் 9 ம் தேதி திடீரென   மரணமடைந்து விட்டார்.

ஆனால், இத்தகவலை குவாட்ரிகா சிஎக்ஸ் நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில்  2019 ஜனவரி 14 ல் அவரது மனைவி ஜெனிபர் ராபர்ட்சன் பதிவு செய்துள்ளார். ஜெரால்டு காட்டன் பயன்படுத்திய மடிக்கணிணியின் பாஸ்வேர்டு தெரியாததால் 190 மில்லியன் டாலர் பணம் பயன்படுத்த முடியாமல் முடங்கிவிட்டது. பாதிககப்பட்ட வாடிக்கையாளர்கள் அந்த நாட்டின் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

உச்சநீதி மன்றத்தில் ஜெரால்டு காட்டனின் மனைவி ஜெனிபர் ராபர்ட்சன் தாக்கல் செய்த மனுவில், ‘கம்ப்யூட்டர்’ தகவல் திருட்டு (ஹேக்கர்ஸ்) நடைபெறாமல் தடுக்க தனது கணவர் மிகவும் கடினமான மற்றும் ரகசிய வார்த்தைகளால் வடிவமைத்துள்ள கடவுச்சொல்லை கண்டறிய முடியாததால் 1 லட்சத்து 15 ஆயிரம் வாடிக்கையாளர்களின் பணத்தை மீட்க முடியவில்லை. கணிணி தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் கடவுச்சொல்லை கண்டறியவும், மடிக்கணிணியை செயல்பட வைக்கவும் முடியவில்லை என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது கணவரின் குவாட்ரிகா சிஎக்ஸ் நிறுவனத்திற்கு ஆரோன் மேத்யூஸ் என்ற புதிய முதன்மை நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பதாக தற்போது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இதனால் கனடாவில் இருந்து குவாட்ரிகா சிஎக்ஸ் நிறுவனம் மூலம் தங்களது சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பி வந்தவர்கள் 190 மில்லியன் டாலர் பணத்தை இழந்து நிற்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.