புதுடெல்லி: இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி, கடந்த 2018 (ஏப்ரல்) முதல் 2019 (பிப்ரவரி) வரையிலான நிதியாண்டு காலத்தில், 4% குறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, அதன் இறக்குமதியை குறைப்போம் என வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடியின் நிர்வாகத்தில்தான் இது நடந்துள்ளது.

மேலும், கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்தது மட்டுமல்ல, கச்சா எண்ணெய் இறக்குமதியும் கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2014-15 நிதியாண்டு காலகட்டத்தில், 37.5 மில்லியன் மெட்ரிக் டன்கள் கச்சா எண்ணைய் உற்பத்தி என்பதிலிருந்து, 2017-18 நிதியாண்டில் 35.7 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி என்பதாக குறைந்தது.

அதேநேரத்தில், 2015-16 காலகட்டத்தில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அளவானது, 202.85 மில்லியன் மெட்ரிக் டன் என்பதிலிருந்து, 217 மில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரித்துள்ளது.

வரும் 2022ம் ஆண்டிற்குள், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவை 10% குறைக்கும் வகையில் மோடி அரசால் கடந்த 2015ம் ஆண்டில் ஒரு திட்டவரைவு உருவாக்கப்பட்ட பின்னர்தான், இறக்குமதி அளவு 6% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் பணம் போடுவோம் என வாக்குறுதி அளித்தவர்கள், பின்னாளில் இருப்பதையும் பிடுங்கிய நிலையைப் போலத்தான் இதுவும் என்கிறார்கள் விமர்சகர்கள்.

– மதுரை மாயாண்டி