சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு சபரிமலையில் குவிந்து வருகின்றனர் சீசன் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 3 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலம் 90,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வரும் நிலையில் பம்பை முதல் சன்னிதானம் வரை சபரிமலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

15 முதல் 18 மணி நேரம் வரை வரிசையில் நிற்கவேண்டி உள்ளதாகவும், தடுப்பு வேலிக்குள் குடிதண்ணீர் கூட கிடைக்காமல் பலர் பரிதவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 48 நாள் விரதம் இருந்து கட்டுப்பாட்டுடன் சாமி தரிசனம் செய்ய வரும் முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் கூட்ட நெரிசல் காரணமாக சாமி தரிசனம் செய்யாமலேயே சபரிமலையில் இருந்து திரும்பியதாக செய்திகள் வெளியானது.

இதனையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் சபரிமலையில் ஏற்பட்டுள்ள கூட்ட நெரிசல் தொடர்பான பிரச்னைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

சபரிமலை கோயில் தரிசனம் நேரத்தை நீட்டிப்பது மற்றும் பாதுகாப்பு பணியில் சி.ஆர்.பி.எப். படையினரை ஈடுபடுத்துவது குறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட நிலையில், நேரக்கட்டுப்பாடு என்பதே பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி கட்டுப்பாட்டுடன் வைப்பதற்காகவே என்று தேவசம் போர்ட் மூலம் கோயில் தந்திரிகள் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.