தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழன் அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த ஆண்டு தீபாவளி அமாவாசைக்கு முந்திய தினம் வருகிறது.
இதனால் அசைவப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் முக்கிய ஆட்டுச் சந்தைகளில் கடந்த சில நாட்களாக ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பேளூர், நங்கவள்ளி மற்றும் தலைவாசல் ஆட்டுச் சந்தைகளுக்கு ஆயிரக்கணக்கான ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்காக ஓட்டி வந்தனர்.
இந்த சந்தைக்கு வந்த ஆடுகள் ரூ. 10,000 முதல் 20,000 ரூபாய் வரை தரம் மற்றும் எடைக்கு ஏற்ப விலை போனதாகக் கூறப்படுகிறது.
வழக்கமான வாரச் சந்தையில் விற்பதை விட தீபாவளி வாரச் சந்தையில் ஆட்டுக்கு ரூ. 3,000 முதல் 4000 வரை அதிகம் விற்பனையானதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மட்டுமன்றி கிருஷ்ணகிரி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் என தமிழ்நாட்டின் பிற சந்தைகளிலும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஆடு மற்றும் கோழி விற்பனை நடைபெற்றுள்ளதை அடுத்து அசைவப் பிரியர்கள் மட்டுமன்றி விவசாயிகளும் தீபாவளியை உற்ச்சாகத்துடன் வரவேற்க தயாராகி வருகின்றனர்.