ஊரப்பாக்கத்தை அடுத்து அருங்கால் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நவம்பர் 22ம் தேதி முதலை ஒன்று தென்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து 7 அடி நீளம் கொண்ட பெண் முதலையை பிடித்து கிண்டி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மற்றும் புனரமைப்பு மையத்தில் வனத்துறை அதிகாரிகள் அதனை ஒப்படைத்தனர்.
வண்டலூர் உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பிறகு அந்த முதலையை காட்டுக்குள் விட வனத்துறை திட்டமிட்டுள்ளது.
முதலை பிடிபட்டது குறித்து ஊரப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அச்சமடைந்துள்ள நிலையில் விவசாய நிலத்தில் முதலை வந்தது எப்படி என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.