சென்னை:
தமிழக பாரதியஜனதா கட்சியின் தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில், அந்த பதவியை கைப்பற்றி கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், பாஜக ஆதரவாளரான ரஜினியை தலைவராக ஒரு தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல் பரவியது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை விமர்சிப்பது அநாகரீகமான விஷயம் என்று பாஜக தேசிய தலைவர் எச். ராஜா கூறி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகவும், தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்றும் கூறி இரண்டு வருடங்கள் ஓடிவிட்ட நிலையில், அவ்வப்போது பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்தும் பாஜகவுக்கு தலைவர்களை பாராட்டி பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய ஆளுமை. அவரை சிலர் தவறாக விமர்சித்து வருகிறார்கள். ரஜினியை விமர்சிப்பது அநாகரீகமான விஷயம் என்றார். மேலும், ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை என்றவர், அவர் இன்னும் கட்சியே தொடங்கவில்லை, இந்த நிலையில் அவரை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
தொடர்ந்து பேசியவர், மோசடிகளை செய்த ப. சிதம்பரம் சிறையில் இருக்கிறார், ப. சிதம்பரம் போலவே தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் விரைவில் சிறை செல்வார். தவறு செய்தவர்கள் எல்லோரும் தண்டிக்கப்பட போகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.