நெல்லை: தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி  குறித்து விமர்சனம் செய்த நிலையில்,   நா.த.கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் சைபர் கிரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளது.

திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்தனர். விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கருணாநிதி, தமிழக அரசு பற்றி அவதூறாக பேசியதாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஆட்சி மற்றும் அரசை விமர்சிப்பவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அதே வேளையில் ஆளும் கட்சியினர் விமர்சனம் செய்தால் அவர்கள் கைது செய்யப்படுவது இல்லை. இதுபோன்ற நடவடிக்கை காரணமாக திமுக அரசு மற்றும் காவல்துறையை நீதிமன்றம் உள்பட சமூக ஆர்வலர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி பிரமுகரான பிரபல யூடியூபர் சாட்டை முருகனை  மீண்டும் காவல்துறை கைது செய்துள்ளது.

இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்த விக்கிவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிட்டார். அவரை ஆதரித்து பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகியான சாட்டை முருகன் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர்.  அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன், திமுக அரசு, முதலமைச்சர் ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உள்பட பலரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளதுடன், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் குறித்தும் கடுமையாக பேசினார்.

இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோவும் வைரலாது.

இதுதொடர்பாக, திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி சைபர் கிரைம் காவல்துறையினர்  சாட்டை துரைமுருகனை கைது செய்தனர். சாட்டை துரைமுருகன், நெல்லை, குற்றாலம் வீராணம் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இது போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கிய சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன்  ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பாஜகவை சேர்ந்த குஷ்பு குறித்து அவதூறாக பேசியதாக  தஞ்சாவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர்  இனி யார் குறித்தும் அவதூறாக பேசக் கூடாது என்ற நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அவருக்கு ஜாமீன் வழங்கியிருந்தது.

ஜாமீனில் வெளியே வந்த அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசினார் என்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.  ஜாமீனுக்கு கொடுக்கப்பட்ட நிபந்தனையை மீறி விட்டதாக அவரது ஜாமீனை 2022ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.

இதை எதிர்த்து சாட்டை துரைமுருகன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அவரது ஜாமீனை ரத்து செய்வதற்கு எந்த முகாந்திரமும் வழக்கில் இல்லை, அப்படி யூடியூப்பில் அவதூறாக பேசுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றால் எத்தனை பேரை அடைக்க வேண்டியிருக்கும் என கூறிய உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.

அதே போல தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதால் மட்டும் அவர் ஜாமீனுக்கான நிபந்தனையை மீறிவிட்டார் என்று கூற முடியாது எனவும் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது

.  இது போன்று பலமுறை அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்டு வெளிவந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக அரசு குறித்தும், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.