சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், குற்றவாளி திமுகவை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் 2-ம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், சம்பவத்தன்று தனது ஆண் நண்பருடன் தனியாக பேசிக்கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அந்த மாணவனை தாக்கிவிட்டு, மாணவி மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாணவி ராஜா அண்ணாமலைபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், இரவு காவலாளி, சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். ஆனால், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த பகுதியில் நிலவிய மொபைல் எண்ணைக்கொண்டு விசாரணை நடத்தினர். இதில், அந்த பகுதியில் பிரியாணி கடை போட்டுள்ள திமுகவைச் சேர்ந்த ஞானசேகரன் என்பது தெரிய வந்தது. இவர்மீது ஏராளமான வழக்குகள் இருப்பதாகவும், இவர் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் நடைபாதையில் பிரியாணிக் கடை வைத்து வியாபாரம் செய்துவருவதாகவும் குற்றம் தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது. மேலும், அவர் அந்த பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் என்பவதும், அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்துள்ள தமிழக எதிர்க்கட்சிகள், சென்னையின் மையத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்திலேயே மாணவிக்கு போதிய பாதுகாப்பு இல்லையா? என்று தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவ மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தினர் பல்கலைக் கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் கோவி.செழியன் உறுதியுடன் தெரிவித்துள்ளார்
. இது குறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அமைச்சர் கோவி.செழியன்,”கிண்டி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக் கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும் .
தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்டுள்ள இச்சம்பவத்தை அரசியல் ஆக்க விரும்புகிறவர்கள் கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அன்றைய ஆட்சியாளர்களின் அழுத்தத்தால் காவல்துறையில் புகார் அளிக்கக் கூட பாதிக்கப்பட்டவர்கள் பயந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” என தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பாக காவல் துறை வெளியிட்ட விளக்கம்:
கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23.12.2024 -ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் தனியாக ஒரு கட்டடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உள்படுத்தியதாகவும். கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் AWPS ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காவல் அதிகாரிகள் பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (ICC-POSH) ஒத்துழைப்புடன் விசாரணை/ செய்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்வதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. புலன்விசாரணையின் போது. அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன், (37) என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். சந்தேக குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேறு ஏதாவது குற்ற செய்கையில் ஈடுபட்டிருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பெருநகர சென்னை காவல் துறை அதிகாரிகளும், பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசனை செய்து (Joint Security Review) மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. மாணவி கூறிய புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட எஃப்ஐஆர் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நண்பருடன் தனியாக இருந்ததை வீடியோவாக எடுத்த ஞானசேகரன், அதனை டீன், பேராசிரியரிடம் காண்பித்து டிசி தர வைப்பேன் எனக் கூறி மிரட்டினார் என்று அந்த மாணவி புகாரில் கூறியுள்ளார். மேலும், தான் சொல்வதை கேட்கவில்லை என்றால் மாணவியின் தந்தைக்கு வீடியோவை அனுப்பி விடுவேன் என்றும் இல்லையென்றால் சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என கூறி ஞானசேகரன் மாணவியை மிரட்டியதாக எஃப்ஐஆரில் சொல்லப்பட்டுள்ளது.
ஆண் நண்பரை மிரட்டி விரட்டிவிட்ட பின், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என்றும் எஃப்ஐஆரில் ஞானசேகரன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஞானசேகரன் தற்போது 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.