சென்னை

மிழக சட்டப்பேரவை தேர்தல் அன்று விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   இதையொட்டி அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  வெளியூரில் வசிக்கும் வாக்காளர்கள் தங்கள் ஊருக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.  வாக்குப்பதிவு அன்று பொது விடுமுறை விடவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அகமது ஷாஜகான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கைத் தொடர்ந்தார்.  அந்த வழக்கு மனுவில், ”தேர்தல் நாளன்று அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.    அதே வேளையில் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வாக்களிக்க வசதியாக விடுமுறையுடன் விடுப்பு அளிப்பதில்லை.  அதற்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ஆகியோரின் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.   தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே ஆணையம் தனியார் நிறுவனங்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு இட்டுள்ளதாகவும் மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் அளித்தார்.

நீதிபதிகள், “சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு பெறத் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு உரிமை உள்ளது.  தேர்தல் ஆணையம் இது குறித்து விளம்பரம் செய்ய வேண்டும்.  விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.