சென்னை

டந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் எண்ணிக்கை 250% அதிகரித்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

உலகெங்கும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.  இவற்றில் பெரும்பாலானவை பாலியல் வன்கொடுமை குற்றங்களாகும்.   இதைத் தடுக்க ஒவ்வொரு நாடும் சட்டங்களை மிகவும் கடுமையாக்கி உள்ளன.   ஆயினும் இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.  அதன்படி இந்திய அளவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகவுள்ள 5 மாநிலங்களில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது.

அந்த புள்ளிவிவரங்களில், தமிழகத்தில் 2018-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4,155 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.  இது 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18% அதிகமாகும்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவலை அளித்துள்ள புள்ளிவிவரம், அதில் 49% பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமை தொடர்பானவை என குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் புதுப்புது வழிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அரங்கேறி வருவதாகவும், இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்களைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பாலியல் சீண்டல் தொடர்பாகக் கிராமம், நகரம் என எல்லா இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் இதன் மூலம் குற்றங்கள் வெகுவாக குறையும் எனவும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.